மணிப்பூர் வன்முறை ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டி சமூகத்தினருக்கு, பட்டியலின பழங்குடி அந்தஸ்து அளிப்பதை எதிர்த்து, கூகி உள்ளிட்ட பழங்குடியினர் அமைப்புகள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேல், மணிப்பூர் முழுதும் பதற்றமான நிலை நீடித்து வருகிறது. வன்முறை சம்பவங்களால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ராணுவ பாதுகாப்பு தரக் கோரிய பழங்குடியின மக்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது அப்போது உச்சநீதிமன்ற நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு: மணிப்பூர் நிலவரம் குறித்து ஒரு வாரத்திற்குள் அம்மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கலவரத்தை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி வழக்கு விசாரணையை வரும் 10- ம் தேதிக்கு தலைமை நீதிபதி ஒத்திவைத்தார்.
இதற்கிடையே, மணிப்பூர் மாநிலத்தில் நிலைமை சீராகி வருகிறது எனவும், மாநிலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கின் நேரம் குறைக்கப்பட்டுள்ளது எனவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.