கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
கேரளாவில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் அதிகரித்துள்ளதால், கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது.
மாநிலத்தின் பல மாவட்டங்களில் இன்று வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
சமீபத்தில், பல மாவட்டங்களில் பெய்த கனமழையால், ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. கொல்லம், ஆலப்புழா, திருச்சூர், கோட்டயம், எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்கள் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
பலத்த காற்று மற்றும் மரங்கள் முறிந்து விழுந்ததால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. பாலக்காடு வடகஞ்சேரியில் தென்னை மரம் முறிந்து விழுந்ததில் தங்கமணி பரிதாபமாக உயிரிழந்தார்.
கனமழை காரணமாக மத்திய கேரளாவில் அமைந்துள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பம்பை ஆற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பலத்த காற்று இருப்பதால் பல மாவட்டங்களில் கடல் கொந்தளிப்பாக உள்ளது, இதன் விளைவாக பலத்த அலைகள் கரையை நோக்கி மோதுகின்றன.
கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோழிக்கோடு இருவஞ்சி புழாவில் ஒருவரும், மலப்புரம் அமரம்பலத்தில் ஒரு பெண் மற்றும் குழந்தை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் அனைத்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் பெரியாறு மற்றும் முத்திரபுழா ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் வருகிற சனிக்கிழமை வரை மோசமான வானிலையே நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. பத்தினம் திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோட்டயம், இடுக்கி, திருச்சூர், கண்ணூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், கொல்லம் மாவட்டத்தில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காசர்கோடு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.