தக்காளியை தொடர்ந்து சாம்பார் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது
மழை காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு அதன் விலை பன்மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தக்காளியின் விலை அதிகரித்து வந்த நிலையில், தற்போது 100 ரூபாய் தாண்டி தக்காளி விற்பனையாகி வருகிறது.
கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 120 முதல் 130 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் சில்லறை விற்பனையில் 150 ரூபாய் வரை தக்காளி விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில் கோயம்பேடு மொத்த சந்தையில் சாம்பார் வெங்காயம் ஒரே நாளில் ரூபாய் 50 அதிகரித்துள்ளது .இதன் மூலம் ஒரு கிலோ சாம்பார் வெங்காயத்தின் விலை ₹150 உயர்ந்துள்ளது. தக்காளி விலை 10 ரூபாய் குறைந்து கிலோ 130 ரூபாய்க்கு விற்பனையாகிறது. விளைச்சல் பாதிப்பு மற்றும் வரத்து குறைவால் நாடு முழுவதும் காய்கறிகளின் விலை ஏற்றம் கண்டு வருகிறது. தொடர்ந்து உணவு பொருட்கள் விலை உயர்ந்து வருவதால் சாமானிய மக்கள் பெரும் கலக்கத்தை அடைந்துள்ளனர்.