கடலோர மாநிலமான கோவாவிற்கு வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை
கடலோர மாநிலமான கோவாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், வலுவிழந்த மரங்கள் மற்றும் கட்டமைப்புகள் அருகில் மனிதர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வட கோவா மற்றும் தெற்கு கோவா மாவட்டங்களில் தலா ஒன்று என இரண்டு வெவ்வேறு உதவி எண்களுடன் கட்டுப்பாட்டு அறைகளை அமைத்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, அரபிக்கடலில் இருந்து வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவா மாவட்டங்களை நோக்கி மழை மேகங்கள் நெருங்கி வருவதால் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. கூடுதலாக, மழைக்காலங்களில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும், முக்கியமாக வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவாவில் பலத்த காற்று வீசக்கூடும். இந்த தகவல் அவர்களின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவாவில் தற்போது நிலவும் சூழல் காரணமாக மும்பை நகருக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பையில் நேற்று இரவு மிதமான மழை முதல் பலத்த மழை பெய்தது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, இன்று கனமழையைக் குறிக்கும் 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பையின் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்யும், சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.