துளசிச் செடியை வணங்கும் வழக்கம் வந்த புராணக் கதை

#spiritual #ஆன்மீகம் #வணங்குதல்
Mugunthan Mugunthan
10 months ago
துளசிச் செடியை வணங்கும் வழக்கம் வந்த புராணக் கதை

துளசியில் சகல விதமான தேவதைகளும் வாழ்வதாக ஐதீகம். துளசி இலை பட்ட நீர், கங்கை நீருக்கு இணையான புனிதமான தீர்த்தமாக கருதப்படுகிறது.

 துளசியை பூஜை செய்து வழிபட்டு வந்தால் அனைத்து விதமான செல்வங்களும் வந்து சேரும். கன்னிப் பெண்கள் துளசியை வழிபட்டால் திருமண தடை நீங்க, நல்ல மண வாழ்க்கை அமையும்.

 திருமணமான பெண்கள் துளசியை வழிபடுவதால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும் என்பது ஐதீகம். விருட்சங்களை தெய்வமாக வழிபடும் முறை இந்துக்களிடம் உண்டு.

 விருட்சங்களை தெய்வத்தின் அம்சமாக பார்ப்பதாலேயே ஒவ்வொரு ஆலயத்திலும் தல விருட்சம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் சில செடிகள் மற்றும் மரங்கள் மிகவும் புனிதத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

துளசி, வில்வம், வேப்பிலை ஆகியன புனிதவும் தெய்வீக சக்தி படைத்ததாக நாம் கருதி வழிபடுகிறோம். இவற்றில் துளசியை மகாலட்சுமியின் அம்சமாக நினைத்து வழிபடுகிறோம்.

மகாலட்சுமி மற்றும் மகாவிஷ்ணுவிற்கு செய்யும் பூஜையில் துளசி நிச்சயம் இடம்பெற்றிருக்கும். துளசி இல்லாமல் விஷ்ணுக்க செய்யப்படும் பூஜைகள் முழுமை பெறாது என கருதப்படுகிறது.

 தூய்மை, புனிதத்துவம் நிறைந்த துளசியை நாம் எதற்காக வழிபட வேண்டும்? யார் இந்த துளசி? இதை எதற்காக நாம் வழிபட வேண்டும்? வீட்டில் துளசி மாடம் வைத்து, விளக்கேற்றி தினமும் வழிபடுகிறோம். 

இதை வழிபடுவதால் நமக்கு அப்படி என்ன நன்மை கிடைக்கிறது என்ற கேள்வி பலரின் மனதிலும் தோன்றலாம். 

இவர்களுக்கான பதில் இதோ...

 துளசி, விருந்தா என்ற பெண்ணின் மறுவடிவமாகும். புராணங்களின்படி, விருந்தா என்பவள் மகாவிஷ்ணுவின் அதிதீவிர பக்தையாவாள். தீவிர பதிவிரதையான விருந்தா, அசுர மன்னன் ஜலந்தரின் மனைவியாவாள்.

 தனது கற்பின் வலிமையாள் யாரும் தனது கணவரை நெருங்க முடியாமல் காத்து வந்தால் விருந்தா. ஆனால் கொடிய அசுரனான ஜலந்தரை கொல்வதற்கு, விருந்தா அமைத்து வைத்துள்ள தடுப்பை உடைப்பது முக்கியம் என்பதால், ஜலந்தரின் உருவத்தில் வந்த விஷ்ணு, விருந்தாவிடம் வரம் பெற்று, அவள் அமைத்துள்ள தடுப்பை உடைத்தார்.

 ஆனால் தனது கணவரின் வடிவில் வந்து, தன்னிடம் தந்திரமாக வரத்தை பெற்றது திருமால் என்பதை புரிந்து கொண்ட விருந்தா, மகாவிஷ்ணுவை கல்லாக போகும் படி சாபம் அளித்தாள்.

 அவள் கல்லாக ஆகும் படி சபித்த மகாவிஷ்ணுவின் வடிவத்தை தான் இன்று நாம் சாளகிராமக் கல்லாக வழிபடுகிறோம். தனது பக்தையான விருந்தாவின் சாபத்தை ஏற்றுக் கொண்ட மகாவிஷ்ணு, அவளின் புனிதமான பக்தி மற்றும் பதிவிரதை தன்மை காரணமாக துளசியின் வடிவில் தனது பூஜைக்கு உரியவளாக இருக்கும் வரத்தை விருந்தாவிற்கு அளித்தார்.

 துளசியை தனது பூஜைக்கு உரிய பொருளாக திருமால் ஏற்றுக் கொண்டதை நினைவு கூறும் விதமாக வட இந்தியாவில் ஆண்டு தோறும் துளசி விவாஹம் கார்த்திகை மாதத்தில் நடத்துகிறார்கள்.

 துளசிக்கும், சாளகிராமத்திற்கும் திருமணம் செய்து வைப்பதே துளசி விவாஹம் ஆகும். துளசியை வெறும் செடியாக இல்லாமல் தெய்வத்தின் அம்சமாக இந்துக்கள் பார்க்கிறார்கள்.

 துளசி செடி அருகே தினமும் விளக்கேற்றி வைத்து வழிபட வேண்டும். ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி நாட்களில் துளசிக்கு தண்ணீர் விடவோ, துளசி இலையை பறிப்பதோ கூடாது. 

தேவைப்பட்டால் முதல் நாளே துளசியை பறித்து வைத்து, பூஜைக்கு பயன்படுத்த வேண்டும். ஆன்மிகத்தில் மட்டுமல்ல மருத்துவத்துறையில் துளசி மிக முக்கிய பொருளாக கருதப்படுகிறது. 

குறிப்பாக ஆயுர்வேத மருத்துவத்தில் துளசி முக்கியமானதாக கருதப்படுகிறது. துளசி, மூலிகைகளின் ராணியாக கருதப்படுகிறது. வீட்டில் துளசி செடியை வளர்ப்பதால் அனைத்து விதமான எதிர்மறையான விஷயங்களில் இருந்தும் விடுபட முடியும். 

வாஸ்து தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கி விடும். துளசி மாலை அணிவதும் வாழ்வில் நல்ல விதமான மாற்றங்களை தரும். தினமும் பூஜை செய்த துளசியை சாப்பிட்டு வந்தால் மனம், ஆன்மா, உடல் ஆகியவை தூய்மை அடையும்.