மேட்டூர் அணையின் நீர்மட்டம் 83.35 அடியாக சரிவு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால், ஒகேனக்கல், மேட்டூர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 700 கனஅடியாக பதிவான நிலையில், நேற்று காலை முதல் வினாடிக்கு 500 கனஅடியாக சரிந்தது.
அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று 226 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 174 கனஅடி வீதம் வருகிறது. மேலும், காவிரி டெல்டா பாசன வசதிக்காக மேட்டூர் அணையில் இருந்து மொத்தம் 12 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.
நீர்வரத்து வினாடிக்கு 200 கன அடிக்கு கீழ் குறைந்துள்ள நிலையில் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று காலை 84.34 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று காலை 83.35 அடியாக குறைந்தது.