கவியருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை
கோவை ஆழியாறு ஒட்டிய வில்லோனி வனப்பகுதியில் கவியருவி நீர்வீழ்ச்சி உள்ளது. இங்குதான் சோத்துப்பாறை ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் அருவியாக கொட்டுகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன் சோத்துப்பாறை ஆற்றில் போதிய நீர்வரத்து இல்லாததால் கடந்த 6 மாதங்களாக கவியருவி வறண்டு காணப்பட்டது.
கோவையில் பொள்ளாச்சி, வால்பாறை, ஆழியாறு உள்ளிட்ட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால், கவியருவியில் மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கவியருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் கவியருவில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே அங்கு பாதுகாப்பு கம்பியையும் தாண்டி வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.இதனால் கடந்த 4 நாட்களாக கவியருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலாப்பயணிகள் நேற்று குளிப்பதற்காக கவியருவிக்கு சென்றிருந்தனர். ஆனால் அருவியில் தண்ணீர் வரத்து இயல்பு நிலைக்கு வரவில்லை.
சுற்றுலாப்பயணிகளின் நலனை கருத்தில்கொண்டு வனத்துறையினர் எவரையும் அருவியில் குளிக்க அனுமதிக்கவில்லை. இதனால் அங்கு குளிக்க ஆர்வமாக வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
வால்பாறை கவியருவில்குளிக்க வனத்துறையினர் தடை, 6-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வால்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழையளவு குறையவில்லை. கவியருவியில் வெள்ளத்தின் வேகமும், நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. எனவே சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கவியருவியில் நீர்வரத்து குறைந்தால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படும்.