சந்திரயான் -3 விண்கலத்தின் கவுண்டவுன் இன்று தொடங்குகிறது!
நிலவின் தென் துருவத்த ஆய்வு செய்ய கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான் 2 விண்கலம் அனுப்பப்பட்டது. நிலவில் தரையிரங்க 2 கி.மீ தொலைவே இருந்த நிலையில், விக்ரம் லேண்டருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதன்பின்னர் பலமுறை முயற்சித்தும், விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் இந்தத் திட்டம் வெற்றி பெறவில்லை. இதனையடுத்து சந்திரயான் -3 திடத்தை இஸ்ரோ கையிலெடுத்தது.
இந்தியாவின் நிலவு பயணத்தை ஆய்வு செய்யும் சந்திரயான் 3 விண்கலத்தின் சோதனை பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதனையடுத்து சந்திரயான் - 3 விண்கலத்தை சுமந்து செல்லும் எல்.வி.எம். 3 எம்-4 ராக்கெட்டில் விண்கலத்தின் பாகங்கள் பொருத்தப்பட்டு அதன் சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நிறைவடைந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.
'சந்திரயான் 3' ராக்கெட்டில் இடம்பெற்றுள்ள 'இன்டர்பிளானட்டரி' என்ற இயந்திரம் 3 முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. ராக்கெட்டில் உள்ள 'புரபுல்சன்' பகுதி விண்கலத்தில் உள்ள ரோவர், லேண்டர் ஆகியவற்றை நிலவில் 100 கி.மீ. தொலைவுக்கு கொண்டு செல்லும் வகையில் வடிவமைத்து பொருத்தப்பட்டுள்ளது. பின்னர் லேண்டர் பகுதி நிலவில் மெதுவாக தரையிறங்கும். அத்துடன் ரோவர் பகுதி நிலவில் ஆய்வு செய்யும் கருவியாகும்.
இந்த நிலையில் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக் கட்டப்பணியான 25½ மணி நேர கவுண்ட்டவுன் இன்று பகல் 1 மணிக்கு தொடங்குகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, நாளை (வெள்ளிக்கிழமை) பகல் 2 மணி 35 நிமிடம் 17 விநாடியில் விண்ணில் பாய்கிறது. நிலவுக்கு அனுப்பப்படும் இந்தியாவின் 3-வது விண்கலமான ‘சந்திரயான்-3’,விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்ப்பதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.