தலைநகர் டெல்லியை சூழ்ந்த வெள்ளப்பெருக்கு
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் தலைநகர் டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. மழை மேலும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. யமுனை ஆற்றின் நீர் மட்டம் அபாய அளவை தாண்டியுள்ளது. இதன் காரணமாக தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை, யமுனை ஆற்றின் நீர்மட்டம் 208.66 மீட்டர்; இருப்பினும், பின்னர் சிறிது குறைந்துள்ளது. தற்போது ஆற்றின் நீர்மட்டம் 207.62 மீட்டராக உள்ளது
ஆற்றின் நீர்மட்டம் சற்று குறைந்தபோதும் இன்னும் அபாய அளவிலேயே உள்ளது. டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய சாலைகளும் வெள்ளநீரால் பாதிக்கப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை தற்போது நிலைமையை சரிசெய்து மேம்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.