குற்றாலம் அருவிகளில் நீராடுவதற்காக சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பு

#India #Tamil Nadu #Tourist #Tamilnews #waterfowl
Mani
1 year ago
குற்றாலம் அருவிகளில் நீராடுவதற்காக சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பு

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனால் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. பொதுவாக வார நாட்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், நேற்றும், இன்றும் விடுமுறை என்பதால்கூட்டம் குற்றாலத்தில் அலைமோதியது.

இதனால் அருவிகளில் குளிப்பதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்ந்தனர். மேலும், அவர்கள் அருவிக்கரைகளில் இருந்த மங்குஸ்தான், ரம்புட்டான் உள்ளிட்ட கேரள சீசன் பழங்களை ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டனர். இதேபோல் சுடச்சுட கடைகளில் வைக்கப்பட்டு இருந்த மிளகாய் பஜ்ஜி உள்ளிட்டவற்றையும் வாங்கி சாப்பிட்டனர். விடுமுறை நாள் என்பதால் அருவிக்கரைகள் முழுவதும் மக்கள் தலைகளாகவே காட்சி அளித்தது.

குறிப்பாக ஐந்தருவி மற்றும் மெயினருவியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மெயினருவியில், வாகன நிறுத்துமிடத்தில் சுற்றுலா பயணிகள் அணிவகுத்து நின்றனர், ஐந்தருவியில், கார், வேன்கள் நிறுத்த இடம் இல்லாததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

பழைய குற்றாலம் அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து வருகின்றனர். அதேபோல், செண்பகாதேவி அருவி மற்றும் புலியருவியில் இருந்தும் மிதமான அளவு தண்ணீர் வெளியேறி, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.