கர்நாடகாவில் கனமழை காரணமாக 7 பேர் உயிரிழப்பு

#India #Death #Rain #HeavyRain #Tamilnews #ImportantNews
Mani
1 year ago
கர்நாடகாவில் கனமழை காரணமாக 7 பேர் உயிரிழப்பு

கர்நாடகாவில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கிய போதிலும், எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. மேலும், அணைகள் வறண்டதால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால், இந்த மாத தொடக்கத்தில் சில நாட்களுக்கு பலத்த மழை பெய்தது.

கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகாண்ட் மற்றும் மலைப்பகுதிகளான சிவமொக்கா, சிக்கமகளூரு, ஹாசன் ஆகிய மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. ஆனால் அதன்பிறகு கடந்த 10 நாட்களுக்கு மேலாக மழை எதுவும் பெய்யாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்கியுள்ளதால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கனமழையால் விளைநிலங்கள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், கிருஷ்ணா, பீமா, வரதா, தூத்கங்கா, மல்லபிரபா, துங்கா, ஷராவதி, நேத்ராவதி, குமாரதாரா, காளி, காவிரி, லட்சுமண தீர்த்தா ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அபாய கட்டத்தை தாண்டி நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கரைகளை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், பல தாழ்வான பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

வெள்ளப்பெருக்கு காரணமாக, ஆற்றங்கரையோரம் வசிக்கும் நபர்களை வெளியேற்ற அறிவுறுத்தப்பட்டு, தற்போது நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எல்லை மாவட்டமான பெலகாவியில் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழையால் மாநிலம் முழுவதும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கனமழையால் இதுவரை மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.