கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு கனமழை என எச்சரிக்கை விடுக்கப்பட்டு, நிவாரண முகாம்கள் திறப்பு

#India #Rain #HeavyRain #Tamilnews #Breakingnews #Kerala
Mani
1 year ago
கேரளாவில் 8 மாவட்டங்களுக்கு கனமழை என எச்சரிக்கை விடுக்கப்பட்டு, நிவாரண முகாம்கள் திறப்பு

இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும், சில வாரங்களுக்கு முன்பு குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்தது. இதையடுத்து, ஒரு வார இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கனமழை பெய்தது.

தற்போது ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. வரும் 27ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனால் அந்த மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. தற்போது எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் 6 முதல் 11 சென்டிமீட்டர் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள கடற்கரையில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும், விழிஞ்சம் முதல் காசர்கோடு வரை 2.5 மீட்டர் முதல் 2.9 மீட்டர் உயரம் வரை அலைகள் வீசக்கூடும் எனவும் கடல்சார் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் வருகிற 28-ந் தேதி வரை கேரளா-கர்நாடகா கடற்கரை மற்றும் லச்சத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் 33 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. இன்று காலை நிலவரப்படி 300க்கும் மேற்பட்ட நபர்கள் அந்த முகாம்களில் தங்கியிருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.