மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு
மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என மழைக்கால கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன. மேலும், மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது வருத்தத்தை தெரிவித்தது.
நேற்றுமுன்தினம், சிபிஐ இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை மணிப்பூர் மாநிலத்திற்கு வெளியே நடத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் மணிப்பூர் வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பான அனைத்து விசாரணை ஆவணங்களும் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். இந்த விவகாரத்தில் இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு ஆறு வழக்குகளை சிபிஐ-யிடமும், மூன்று வழக்குகளை தேசிய புலனாய்வு முகமையிடமும் ஒப்படைத்துள்ளது.