ஹைதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பெண் கைது
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மதுர நகரில் சாய் கணேஷ் ரெசிடென்சி என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் வசதி படைத்த ஏராளமான தொழிலதிபர்கள் வசித்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 50 வயது முதல் 75 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இரவு நேரங்களில் சூதாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று, சூதாட்ட நடவடிக்கைகள் குறித்து குடியிருப்பில் வசிப்பவர்களிடம் இருந்து தகவல் கிடைத்ததும், போலீஸ் இன்ஸ்பெக்டர் கலீல் பாஷா தலைமையிலான போலீசார், அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்தனர்.
அப்போது ஒரு மேசையில் 7 பெண்களும் மற்றொரு மேசையில் 5 பெண் தொழிலதிபர்கள் சீட்டு கட்டுகள் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
இதனைக் கண்ட போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் மற்றும் சூதாட்டம் நடத்திய 52 வயது பெண் ஆகியோரை கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து ரூ.1.12 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஐந்து பேர் தொழிலதிபர்கள் என்றும், ஏழு பேர் குடும்பத் தலைவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து, தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் கணவர் அனுமதியுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்ததும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.