கேரளாவில் இருந்து சார்ஜாவுக்கு சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்
கேரளாவின் கொச்சி நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவுக்கு புறப்பட்டது.
புறப்பட்ட பிறகு, ஒரு பயணி விமானத்தில் இருந்து தீயில் ஏதோ கருகும் வாசம் வருவதாக விமான ஊழியர்களிடம் தெரிவித்தார். பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், விமானத்தை கொச்சி விமான நிலையத்திற்கு திருப்பி அவசரமாக தரையிறக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு கொச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்ட பிறகு விமானத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. எனினும், விமானத்தில் தீப்பிடித்ததற்கான அறிகுறிகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
இருப்பினும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றொரு விமானத்தை ஏற்பாடு செய்ய முடிந்தது, அந்த விமானம் 175 பயணிகளுடன் தாமதமாக சார்ஜாவுக்கு புறப்பட்டு சென்றது.