கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 73000 பேர் பங்கேற்கும் மாரத்தான் போட்டி
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த ஆண்டுக்கான கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி வருகிற 6-ந்தேதி நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற மாரத்தானில் 43 ஆயிரத்து 737 பேர் ஓடினார்கள். இது ஆசிய சாதனையாக பதிவானது. இதில் கிடைத்த ரூ.1 கோடியே 22 லட்சம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. நமக்கு நாமே திட்டத்தில் சுமார் 5 கோடி செலவில் எழும்பூர் ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டப்படுகிறது.
இந்த ஆண்டு கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் போட்டியாக நடத்தப்படுகிறது. நாளை மறுநாள் (ஞாயிறு) நடைபெறும் மாரத்தான் 4 பிரிவுகளில் நடத்தப்படுகிறது.
42.2 கி.மீ., 21 கி.மீ., 10 கி.மீ., 5 கிலோ மீட்டர் தூரங்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று ஓடுவதற்கு 73 ஆயிரத்து 206 பேர் முன் பதிவு செய்துள்ளார்கள்.
இது கின்னஸ் சாதனையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாலை 4 மணியளவில் தொடங்கும் மாரத்தான் போட்டிகள் காலை 8 மணி அளவில் நிறைவடையும். 42 கி.மீ. மற்றும் 21 கி.மீ. பிரிவில் முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-ம் பரிசாக ரூ.50 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். 10 கி.மீ. பிரிவில் தலா ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ. 15 ஆயிரமும், 5 கி.மீ. பிரிவில் ரூ.25 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.
கலைஞர் நினைவிடம் அருகில் தொடங்கும் போட்டிகள் காமராஜர் சாலை, கலங்கரை விளக்கம், பட்டினப்பாக்கம், முத்து லெட்சுமி பார்க், பெசன்ட் நகர், இந்திரா நகர், ஓ.எம்.ஆர்.சாலை, வாலாஜா சாலை, சிவானந்தா சாலை வழிகளில் நடக்கிறது. வழிநெடுக 14 இசைக்குழுக்கள் போட்டியாளர்களை ஊக்கப்படுத்தும். 17 இடங்களில் குடிநீர், ஊக்கப் பானங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு விழா என்பதால் இந்த போட்டியை சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. முன்னெடுத்து செய்வதில் பெருமை கொள்கிறோம்