மணிப்பூரில் மீண்டும் அமுலாகும் ஊரடங்கு
மணிப்பூர் பிரசேதத்தில் நேற்று மீண்டும் வெடித்த கலவரத்தில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.
மேலும், அங்கு குகி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்று அவமதித்த காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், குவாக்டா பகுதியில் நேற்று (04) இரவு மீண்டும் புதிதாக கலவரம் வெடித்துள்ளது. இந்த கலவரத்தில் மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த அப்பா, மகன் மற்றும் அயல் வீட்டிலிருந்த ஒருவர் என மூன்று பேரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாய் குகி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளை மைத்தேயி சமூகத்தினர் தீக்கிரையாக்கியுள்ளனர். இதனையடுத்து,அப்பிரதேசங்களில் தளர்த்தப்பட்ட ஊடரங்கு மீண்டும் திரும்பப்பெறப்பட்டுள்ளது.
குறிப்பாக இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு பகுதிகளில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு திரும்பப்பெறப்பட்டுள்ளது. தொடர்ந்து கலவர பிரதேசங்களில் மீண்டும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்று முன்தினம் மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் ஆயுதப் படைகளுக்கும், மைத்தேயி சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 17 பேர் காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.