கோடிகளில் சம்பாதிக்கும் உலகின் பணக்கார இந்திய பெண் யூடியூபர்!
லில்லி சிங் மிக சாதாரணமாக, சராசரியான சம்பளம் பெறும் ஊழியராக தனது வாழ்க்கையை தொடங்கியவர். 2010-ல் தொழில்முறை யூடியூபராக களமிறங்கிய இவர், அதன் பின்னர் 'சூப்பர்வுமன்' என்ற புனைப்பெயரில் உலகளவில் பிரபலமாகிப் போனார்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த லில்லி சிங், கனடாவுக்கு புலம்பெயர்ந்தார். தமது தொழில் வாழ்க்கையை விரிவுபடுத்தும் விதமாக அங்கிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு ஜாகை மாறினார்.
இவரது காணொலிகள் பொதுவாக, ஊக்கமளிக்கும் குறிப்புகள், தினசரி செயல்பாடுகள் குறித்து என பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். இதனால் வெகுவிரைவில் பல மில்லியன் பார்வையாளர்களைச் சம்பாதித்தார் சிங். தொடர்ந்து வித்தியாசமான கெட்டப்களில் அசத்தி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார்.
2015-ல் ஆஸ்திரேலியா, துபாய், ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு தொழில்முறை சுற்றுப்பயணம் ஒன்றையும் மேற்கொண்டார் லில்லி சிங். இதனிடையே, தாம் ஒரு இருபாலின ஈர்ப்பாளர் என்பதை 2019-ல் வெளிப்படையாகவே அறிவித்தார் சிங்.
அமெரிக்காவில் 6,000 சதுர அடி கொண்ட அவரது குடியிருப்பின் மொத்த மதிப்பு 4.1 மில்லியன் டாலர்கள். ஃபோர்ப்ஸ் பத்திரிகை உலகில் அதிகம் சம்பாதிக்கும் யூடியூபராக லில்லி சிங்கை இருமுறை பட்டியலிட்டுள்ளது. இவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.