சந்திரயான் 3 - விக்ரம் லேண்டரின் உயரம் வெற்றிகரமாக குறைப்பு!
சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டரின் உயரம் வெற்றிகரமாக குறைக்கப்பட்டதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அறிவித்துள்ளது.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் வகையில் 615 கோடி ரூபாய் செலவில் கடந்த ஜூலை 14ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. தொடர்ந்து நிலவின் சுற்றுப்பாதைக்குள் நுழைந்த விண்கலத்தில் இருந்து, விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகப் பிரிந்தது.
இந்நிலையில் விக்ரம் லேண்டரின் உயரமானது நிலையான முறையில் குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அதிகபட்சம் 157 கிலோமீட்டர் - குறைந்தபட்சம் 113 கிலோமீட்டர் என்ற நீள்வட்டப்பாதையில் சுற்றி வருவதாகவும், அடுத்த வேகக்குறைப்பு நடவடிக்கை 20ம் தேதி நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி வரும் 23ம் தேதி விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கி, அதில் இருந்து பிரக்யான் ரோவர் ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சந்திரயான் 3 விண்கலம் எடுத்த நிலவின் புகைப்படங்களை வீடியோவாக இஸ்ரோ வெளியிட்டுள்ளது.