பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.34 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
பெங்களூரின் புறநகர் பகுதியான தேவனஹள்ளியில் அமைந்துள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தங்கம் மற்றும் போதைப்பொருள் போன்ற பல்வேறு சட்டவிரோத பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து கடத்தப்படுகின்றன. இந்நிலையில், துபாயில் இருந்து விமானம் மூலம் தங்கம் கடத்தப்படுவது குறித்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, துபாயில் இருந்து புறப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் அவர்களது தனிப்பட்ட உடைமைகளை அவர்கள் முழுமையாக ஆய்வு செய்தனர்.
அப்போது பயணி ஒருவரின் உடைமையில் துணிகளுக்கு இடையே பேஸ்ட் வடிவில் 684 கிராம் தங்கம் இருந்தது தெரிந்தது. இந்த நபர் துபாயில் இருந்து பேஸ்ட் வடிவில் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் வெளிநாடுகளில் இருந்து பலமுறை சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பயணியை கைது செய்த அதிகாரிகள், ரூ.34 லட்சம் மதிப்புள்ள 684 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.