இமாசலப்பிரதேசத்தில் தொடர் மழை: வெள்ளத்தில் சிக்கிய 10 பேர் மீட்பு
இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், மாநிலத்தின் பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பின. அந்தவகையில் மாண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள கோல் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அணைக்கு வரத்து அதிகரித்து வருகிறது.
இந்த நீர்மட்டம் மற்றும் மரத்துண்டுகளின் பெருக்கத்தை கண்காணிப்பதற்காக வனத்துறை அதிகாரிகள் 5 பேர் மற்றும் உள்ளூர் மக்கள் 5 பேர் என 10 பேர் நேற்று முன்தினம் மாலையில் ஒரு படகில் அணையில் ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, நீர்வரத்து அதிகரித்ததால், அணைக்கு மேலே உள்ள மரக்கட்டைகள் மற்றும் வண்டலில் சிக்கிக்கொண்டது. அவர்களால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இரவு முழுவதும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, நேற்று அதிகாலையில் பத்து பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் இமாசல பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.