இராணுவ வீரர்களை சந்தித்த தலைவர் ரஜினிகாந்த்
இமயமலைக்கு ஆன்மீக பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த், அங்கு புண்ணிய தலங்களுக்கு சென்றார். பாபாஜி மற்றும் அவரது சீடர்களின் ஆசிரமத்துக்கும் சென்று மதகுருமார்களிடம் ஆசி பெற்றார்.
இதற்கிடையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசிய அவர், பின்னர் அயோத்திக்கு சென்று அங்கு அனுமன்கர்கி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து ராமர் கோவில் கட்டும் இடத்தை பார்வையிட்டார். ரஜினிகாந்தின் மனைவி லதாவும் உடன் சென்றார்.
லக்னோவில் நேற்று ராணுவ அதிகாரிகளை ரஜினிகாந்த் சந்தித்து பேசினார். ரஜினிகாந்தை இந்திய ராணுவ தலைமை முதன்மை கமாண்டிங் அதிகாரி லெப்டினெண்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்பிரமணி, ரஜினிகாந்தை வரவேற்றார். பின்னர் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் ரஜினிகாந்த் உரையாடினார்.
இந்த சந்திப்பின்போது, 'நாட்டுக்கு சேவையாற்றும் ராணுவ வீரர்களின் சேவை அளப்பரியது' என்று கூறி, ராணுவ வீரர்களை பெருமையுடன் ரஜினிகாந்த் பாராட்டினார். முன்னதாக ரஜினிகாந்துடன், ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். ஜெயிலர் படத்தில் ரஜினியின் நடிப்பு சிறப்பாக இருந்ததாக பாராட்டும் தெரிவித்தனர்.