சந்திரயான்-3 லேண்டர் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புதிய புகைப்படம் வெளியீடு
பெங்களூரு: சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட லேண்டர் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 20ம் தேதி சந்திரயான் -3 விண்கலம் நிலவை எடுத்த நெருக்கமான புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. லேண்டரில் உள்ள 4-வது கேமரா மூலம் நிலவின் மிக அருகில் துல்லியமாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவுக்கு 70 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபடி லேண்டரில் உள்ள 4வது கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
விக்ரம் லேண்டரில் உள்ள கேமரா நிலவின் மேற்பரப்பை மிக துல்லியமாக படம்பிடித்து அனுப்பியுள்ளது. நேற்று முன்தினம் லேண்டரில் உள்ள அதிநவீன கேமராவில் எடுக்கப்பட்ட நிலவின் படங்களை வீடியோவாக வெளியிட்டது. விக்ரம் லேண்டர் நாளை நிலவில் தரை இறங்க உள்ள நிலையில் புதிய வீடியோக்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. லேண்டரின் அடுத்தடுத்த நகர்வுகளை இஸ்ரோ பதிவு செய்து வருகிறது. திட்டமிட்டபடி நாளை மாலை 6.04 மணிக்கு சந்திரயான் – 3 விண்கலத்தை நிலவில் தரையிறக்க இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது.