லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலய மகோற்சவ பெருவிழா எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பம்
லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பகபதி கற்பக விநாயகர் ஆலயத்தின் 22வது மகோற்சவ பெருவிழா எதிர்வரும் 28-08-2023 திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மகோற்சவ விழாவானது 10-09-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் வசந்த மண்டப பூஜையுடன் தொடர்ந்து பகல் 11.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.
வருடந்தோறும் தாயக மற்றும் தமிழ்நாடு நாதஸ்வர தவில் வித்துவான்களின் இசை வாத்தியங்கள் முழங்க இடம்பெரும் விழா நிகழ்வில் பிரபல ஆன்மீக அறிஞர்களின் சிந்தனைக்கருத்துகளும் பிரசங்கமாக நிகழ்வதோடு கலைநிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது. அத்துடன் இவ்வாண்டு முதல் ஆலய எட்டாம் திருவிழா 04-09-2023 திங்கள்கிழமை இரவுத் திருவிழா மாணவர்களின் உபயமாக நடைபெறவுள்ளது. வருங்காலத்தில் இளையோரின் ஆன்மீக வளர்ச்சிக்கு நல்ல ஊன்றுகோலாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்முறை திருவிழாக் காலத்தின் கொடியேற்றத்தன்று பகலிலும் தொடர்ந்து இரவு உற்சவ நிறைவில் சண்முகவடிவேல் மற்றும் வழக்கறிஞர் ராமலிங்கம் ஆகியோரின் தொடர் சொற்பொழிவுகளும் இடம்பெறவுள்ளது. அனைத்து அடியார்கள் தங்கள் குடும்பசகிதம் இளையோர்களையும் அழைத்து வந்து ஆன்மீக அருளை உள்வாங்குமாறு ஆலய நிர்வாகத்தினர் ,சிவாச்சாரியார்கள் ,உபயகாரர்கள் அழைப்புவிடுத்துள்ளனர். நிறைவான திருவிழாக் காலங்களில் சப்பறம்,தேர் தீர்த்தம் பூங்காவனம் ஆகிய நாட்களில் ஆலய நாதஸ்வர தவில் வித்வான்களுடன் இலங்கையில் புகழ் பூத்த நாதஸ்வர வித்வான் பஞ்சமூர்த்தி குமரன் அவர்களது நாதஸ்வர இசையும் நடைபெற உள்ளது.
மற்றும் இவ்வாலயத்தின் தனிச்சிறப்பு நேர்த்தியாகத் தூக்குக் காவடி எடுக்கும் பிரித்தானியாவின் ஒரே ஒரு கோவிலாக விளங்கி வருகிறது. வருடா வருடம் தங்கள் பெரிய பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் படி வேண்டி, அதற்காக ஒவ்வொரு வருடமும் யாரோ ஒரு அன்பராவது தூக்குக் காவடி எடுக்கும் கோவிலாக இக்கோவில் பெருமை பெறுகிறது.
இறைவனுக்கு செய்யும் நேர்த்தி வடிவில் காவடி,கற்பூரச்சட்டி,பாற்குடம் போன்றவையும் ,காவடி காற்றின் மூலமாகவும் கற்பூரச் சட்டி தீவழியாகவும் பாற்குடம் நீர் வழியாகவும் இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்டு அடியார்காளால் நிறைவேற்றப்படுகிறது. தேர்த்திருவிழா நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கு கொள்கிற காட்சியை கற்பக விநாயகப் பெருமான் ஆலயத்தில் காணலாம். பல்வேறு வர்த்த்க பெருமக்களின் அனுசரணையுடன் அன்னதான வைபவமும் இடம்பெறவுள்ளது.
தேர்த் திருவிழா நாளில் ஆலய முன்றலில் இளையோரின் நடன நிகழ்வு மற்றும் கலைநிகழ்வுகள் இடம்பெறவுள்ளது
அடியார்கள் தங்களது வருகையை ஊக்கமுடன் வந்து கலந்து இறையருளுடன் ,இசை ,இயல் முதலியவற்றையும் கேட்டு இன்புற்று வாழ்வின் சோகங்கள் சங்கடங்கள் நீங்கித் தங்கள் நற்பிரார்த்னைகள் நிறைவேறவும் தங்கள் குழந்தைகளின் கல்வி ,வாழ்க்கை நல்ல முன்னேற்றம் கிடைக்கவும் அன்போடு ஆலய நிர்வாக சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.