இஸ்ரோ தலைவர், விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பிரதமர் மோடி பாராட்டு
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 ஜூலை 14 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது. கடந்த 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது. பின்னர், அதில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளது.
லேண்டரில் உள்ள அனைத்து ஆய்வு கருவிகளும் செயல்பட தொடங்கியுள்ளன. தொடர்ந்து, அறிவியல் ஆய்வு பணிகளும் தொடங்கி உள்ளன என இஸ்ரோ அறிவித்தது.
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள தென்னாப்பிரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டதுடன், அதன் தலைவர் சோம்நாத் உடன் தொலைபேசி வழியே பேசி வாழ்த்தும் தெரிவித்து கொண்டார்.
இந்த நிலையில், சந்திரயான் 3 விண்கல வெற்றியை தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திப்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை பெங்களூருவுக்கு வருகை தந்துள்ளார். அவர், காலை 7 மணிக்கு இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்தித்து பேசிகிறார் என தெரிவிக்கப்பட்டது.
அவர் வருகையை முன்னிட்டு பெங்களூரு விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவரை காண கட்சியினர், மக்கள் கூடியிருந்தனர். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி கூடியிருந்த மக்கள் முன் பேசும்போது, உங்களையும், வெற்றி பெற்ற விஞ்ஞானிகளையும் பார்ப்பதற்கு, என்னை கட்டுப்படுத்த முடியவில்லை.
விண்கல வெற்றியின்போது, நான் வெளிநாட்டுப் பயணத்தில் இருந்ததால், விஞ்ஞானிகளை உடனே சந்திக்க முடியவில்லை. அதனால்தான் நாடு திரும்பிய உடனே, பெங்களூருவுக்கு வருகை தந்திருக்கிறேன். விஞ்ஞானிகளை சந்திக்க வருகிறேன் என்பதனால், முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரியை வரவேண்டாம் என கூறினேன்.
நான் பெங்களூருவுக்கு வரும்போது, முறைப்படி அரசு நடைமுறைகளை பின்பற்றினால் போதும் என கூறினேன் என்று பேசியுள்ளார்.
இதன்பின், பெங்களூருவில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திக்க சென்றார். காரில் நின்றபடியே கூடியிருந்த கூட்டத்தினரிடம் கை காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து, இஸ்ரோவுக்கு வந்த அவர், தலைவர் சோம்நாத் மற்றும் பிற விஞ்ஞானிகள் அவரை நேரில் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர். அவர்களை பிரதமர் மோடி பாராட்டினார்.
இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திக்கும் அவர், இஸ்ரோ மையத்திலேயே ஒரு மணிநேரம் இருக்கிறார். அந்த ஒரு மணி நேரமும் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். இதன்பின்பு, விண்கலம் செயல்பாட்டு பணிகளை பற்றி பிரதமர் மோடிக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கி கூறினார்.