ஆகஸ்ட் 23-ம் தேதி தேசிய விண்வெளி தினம் என பிரதமர் மோடி அறிவிப்பு

#India #Prime Minister #D K Modi #Breakingnews #ISRO
Mani
1 year ago
ஆகஸ்ட் 23-ம் தேதி தேசிய விண்வெளி தினம் என பிரதமர் மோடி அறிவிப்பு

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14-ந்தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் லேண்டர் கடந்த 23-ந்தேதி மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கியது. பின்னர், அதில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளது. லேண்டரில் உள்ள அனைத்து ஆய்வுகளும் செயல்படுகின்றன.

இந்நிலையில் தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு திரும்பிய பிரதமர் மோடி, இன்று காலை பெங்களூரு சென்று இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பேசினார்.

இஸ்ரோ நிறுவனத்திற்கு சென்ற பிரதமரை அதன் தலைவர் சோம்நாத் மற்றும் பிற விஞ்ஞானிகள் நேரில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு பிரதமர் மோடி தனது நன்றியைத் தெரிவித்தார். இதையடுத்து, இஸ்ரோ தலைவர் சோம்நாத், விண்கலத்தின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடிக்கு விளக்கமளித்தார்.

இதேபோன்று பிரதமர் மோடி, பெண் விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து அவர்களுடன் உரையாடினார். அப்போது அவர் பேசும்போது, சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய பகுதியை சிவசக்தி முனை என பிரதமர் மோடி குறிப்பிட்டார். சந்திரயான்-2 விண்கலம் நிலவில் மோதிய பகுதி திரங்கா முனை என அழைக்கப்படும் என கூறினார்.

தொடர்ந்து அவர், சந்திரயான்-3 விண்கல திட்டத்தில் பெண் விஞ்ஞானிகள் முக்கிய பங்காற்றினர். மக்களின் நலனுக்காக அறிவியலை பயன்படுத்துவதற்கு இந்த சிவசக்தி விசயம் வரவிருக்கிற தலைமுறைக்கு ஓர் உந்துதலாக இருக்கும்.

மக்களின் நலனே எங்களின் முதன்மையான முன்னுரிமை என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். அதன்பிறகு, ஆகஸ்ட் 23-ம் தேதியை தேசிய விண்வெளி தினம் என்றும் அறிவித்துள்ளார்.