மணிப்பூரில் மீண்டும் ஆளில்லாத வீடுகள் தீவைப்பு
மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கடந்த மே 3-ந் தேதி கலவரம் வெடித்தது. சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு நேற்று மீண்டும் வன்முறை சம்பவம் நடந்தது.
தலைநகர் இம்பாலில் நியூ லம்புலேன் பகுதியில், ஆளில்லாத மூன்று வீடுகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
அப்பகுதியில் பொதுமக்கள் கூடினர். மத்திய, மாநில பாதுகாப்பு படைகளை அங்கு குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, கூட்டத்தை கலைத்தனர்.
இதற்கிடையே, இம்பால் மேற்கு மாவட்டம் சகோல்பாண்ட் என்ற இடத்தில் சுகாதாரத்துறை முன்னாள் மந்திரி கே.ரஜோவின் வீட்டைப் பாதுகாத்து வந்த பாதுகாவலர்களிடம் இருந்து ஒரு கும்பல் மூன்று ஆயுதங்களைப் பறித்தது. அந்த ஆயுதங்களில், ஏ.கே. ரக துப்பாக்கிகளும், ஒரு நீளமான துப்பாக்கியும் அடங்கும்.