தமிழர் விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்: சுரேஷ்

#SriLanka
Mayoorikka
2 years ago
தமிழர் விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்: சுரேஷ்

13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதைத் தடுத்து நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு, தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள பௌத்த இனவாதப் போராட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உத்தியோகபூர்வ பேச்சாளரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன், சர்வதேச சமூகமும் குறிப்பாக இந்தியாவும் அரசாங்கத்தினதும் சிங்கள பௌத்த இனவாத சக்திகளினதும் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்குக் கடிவாளமிடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 சிங்கள பௌத்த மேலாதிக்க சக்திகள் இலங்கையின் வடக்கிலும்-கிழக்கிலும், தெற்கிலும் தனது கோரமுகத்தை மீண்டும் காட்டத் தொடங்கியுள்ளன. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய அரசாங்கமும் ஜனாதிபதியும் கண்டும் காணாமலும் உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 இனவாத செயல்களைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை (29) அவர் வெளியிட்ட அறிக்கையில் மேற்குறிப்பிட்ட விடயம் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

 இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜூலை மாதம் 20ஆம் திகதி இந்தியப் பிரதமரின் அழைப்பின்பேரில் டெல்லி சென்றிருந் போது இந்திய-இலங்கை உறவு, பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் பேசப்பட்டதுடன், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளுக்கான தேர்தலை நடாத்துமாறும், அதற்கான அதிகாரங்களை பதின்மூன்றாவது திருத்தத்தின் ஊடாக முழுமையாக வழங்குமாறும் இந்திய பிரதமர் கூறியிருந்தார். 

 கொழும்பு திரும்பிய ஜனாதிபதி இது தொடர்பில் பாராளுமன்றத்தில் நீண்டதொரு உரையையும் ஆற்றியிருந்தார். பாராளுமன்றத்தில் அவரது உரைக்கு கணிசமான அளவுக்கு எதிர்ப்பு இருந்ததுடன், சிங்கள பௌத்த இனவாத சக்திகள் அதனை முழுமையாக எதிர்த்தனர்.

 இது ஒருபுறமிருக்க, வடக்கு-கிழக்கில் புதிய பௌத்த விகாரைகளை உருவாக்குவதிலும் சிங்கள மக்களை அங்கு குடியேற்றுவதிலும் சிங்கள பௌத்த துறவிகளும், தொல்பொருள் திணைக்களத்தினரும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

 இதற்கான தமிழ் மக்களின் எதிர்ப்புகளும் போராட்டங்களும் வடக்கு-கிழக்கில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. இந்த சூழ்நிலையில், பதின்மூன்றாவது திருத்தத்தை நிறைவேற்றுவதைத் தடுத்து நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு, தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள பௌத்த இனவாதப் போராட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

 இலங்கையின் பொருளாதாரம் தொடர்ந்தும் வங்குரோத்து நிலையில் இருக்கின்ற நிலையில், ஜனாதிபதி அவர்கள் ஒரு புதிய ஜனாதிபதித் தேர்தலுக்கும் முகங்கொடுக்க உள்ளார். 

 இவ்வாறான சூழ்நிலையில், அரசிற்கு எதிரான சிங்கள மக்களின் போராட்டங்களைத் திசைதிருப்புவதை நோக்கமாகக் கொண்டும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டும் முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் மேற்கண்ட போராட்டங்களுக்கு அரசு மறைமுக ஆதரவை வழங்குவதாகவே தோன்றுகின்றது.

 இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே, இலங்கையில் சிங்கள இனவாதத்தை முன்னிறுத்திய தமிழர் விரோத அரசியலே தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இலங்கை அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை என்பதுடன், குறைந்தபட்சம் 1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் ஏற்படுத்தப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்தைக்கூட நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கமோ ஜனாதிபதியோ தயாராக இல்லை என்பதே இன்றைய நிலைமை.

 இலங்கையின்மீது சர்வதேச அழுத்தமும் குறிப்பாக இந்தியாவின் வலியுறுத்தலும் அதிகரித்துள்ள நிலையில், அடுத்துவரும் தேர்தல்களில் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் இலங்கையின் ஜனாதிபதி இந்த அழுத்தங்கள் வலியுறுத்தல்களிலிருந்து தப்பிக்கொள்வதற்காக சிங்கள பௌத்த இனவாத சக்திகளின் பின்னாலிருந்து செயற்படுவதாகவே தோன்றுகின்றது. 

 எனவே, இலங்கை அரசினதும் சிங்கள பௌத்த இனவாத சக்திகளினதும் தந்திரங்களைப் புரிந்துகொண்டு அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் தொடர்பாக சர்வதேச சமூகமும் குறிப்பாக இந்தியாவும் சிந்திக்க வேண்டிய தருணம் இது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4