17 ஆம் ஆண்டு செஞ்சோலை வளாக படுகொலை நினைவு நாள்-பிரித்தானியா.
உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் இளையோர் அமைப்பினால் 27.08.2023 அன்று ஞாயிற்றுக்கிழமை செஞ்சோலை வளாக படுகொலையின் 17ம் ஆண்டு நினைவு நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
கடந்த 14.08.2006 அன்று வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த, செஞ்சோலை வளாகத்தில், இடர் கால முகமைத்துவம், தலைமைத்துவம் மற்றும் முதலுதவி பயிற்சிக்காக ஒன்றுக்கூடியிருந்த உயர்தரம் கற்றுக்கொண்டிருந்த பாடாலை மாணவிகள் மீது இலங்கை வான்படையினர் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.
இந்த தாக்குதலில் 53 மாணவிகள் உட்பட 56 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த கொடூர இனவழிப்பு சம்பவத்தின் 17 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு பிரித்தானியாவில் உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் இளையோரினால் முன்னெடுக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வாக துயிலுமில்ல வாயிலில் இருந்து இலங்கை வான் படையால் கொல்லப்பட்ட 56 பேரின் திருவுருவப்படங்கள் அணிவகுப்பாக இளையோரினால் தாங்கிவரப்பட்டது. வளாகத்தில் அமைந்துள்ள பிரதான நினைவுத்தூவியின் முன் அணிவகுத்து நின்றனர்.
அவ்வேளை பொதுச் சுடர்களை வணக்கத்துக்குரிய மதகுரு, மற்றும் இளையோர்களான திகழ்பருதி, மதுரா, தனுசான், சஞ்சிகா ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து பிரித்தானியாவின் தேசியக் கொடியினை செல்வன்.நிலக்சன் அவர்களும் தமிழீழ தேசியக் கொடியினை செல்வி.அருவி அவர்களும் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து திருவுருவப்படங்கள் பிரதான மண்டபத்துக்குள் எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்த படத்தாங்கிகளில் நிலைப்படுத்தப்பட்டன.
இன்றைய நாளில் மாதாந்த நினைவு வணக்க நிகழ்வுடன் இணைந்ததாக இவ் சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொது மாவீரருக்கான ஈகச்சுடரினை செல்வி.தனுசா அவர்கள் ஏற்றி வைக்க மலர் மாலையினை செல்வன்.சுடர்வண்ணன் அவர்கள் அணிவித்தார்.
அக வணக்கத்தினை தொடர்ந்து இம்மாதத்தில் வீரச்சாவினை கொண்ட மாவீரர்களின் உரித்துடையோர் தமது உறவுகளின் திருவுருவப் படங்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்தனர்.
தொடர்ந்து நிகழ்வுக்கு வருகை தந்த அனைத்து உறவுகளும், இனப்படுகொலையின் சாட்சிகளாக இருந்த பாடசாலை மாணவிகளின் திருவுருவப்படங்களுக்கும், இம்மாதத்தில் வீரச்சாவினை தழுவிக் கொண்ட மாவீரர்களின் திருவுருவ படங்களுக்கும், ஈகை சுடர்களை ஏற்றி மலர் வணக்கத்தினை செய்தனர்.
இதேவேளை தமிழ் மக்களின் விடுதலைக்காக தனது இறுதி மூச்சு வரை போராடிய வரும், தேசியத் தலைவரினாலும் ,, தமிழக மக்களாலும் தமிழீழ மக்களாலும் ஆழகமாக நேசிக்கப்பட்டவரும் 14 .08 2023 அன்று தமிழகத்தில் சாவடைந்தவருமான "தடா சந்திரசேகரம்" ஐயா அவர்களும் இன்றைய நாளில் நினைவு கூரப்பட்டார்.
தொடர்ந்து இளையோர்களின் நினைவுரைகளும், கலை நிகழ்வுகளும் உணர்வு பூர்வமாக எழுச்சியுடன் நடைபெற்றது.
"எமக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்" எனும் மகுடவாக்கியத்துடன் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இன்றைய நிகழ்வின் சிறப்பு அம்சமாக தமிழ் மொழிக்கான இணைய வழி கல்வி சேவையினை "கல்வி"எனும் அமைப்பினால் அறிமுகப்படுத்தப்பட்டது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் இளையோர்கள் மற்றும் தமிழ் மொழியை கற்க விரும்பும் மூத்தவர்கள் என்ற வேறுபாடு இன்றி தமிழ் மொழியினை தலைமுறை கடந்தும் கொண்டு செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
இறுதியில் உறுதி ஏற்றுடனும் மற்றும் தேசியக் கொடிகள் கையேற்புடனும் நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தன.