கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு
டெல்லியில் நேற்று நடந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23வது கூட்டத்தில் காவிரி நதிநீர் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு 5,000 கன அடி தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. எஸ்.கே.கல்தர் தலைமையில் நடந்த கூட்டத்தில் செப்டம்பர் 12ம் தேதி வரை வினாடிக்கு 5000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இரு அணைகளில் இருந்தும் முன்பு 4,293 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இன்று 6,398 கனஅடியாக திறக்கப்பட்டுள்ளது.
கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 4,398 கனஅடியும் கபினி அணையிலிருந்து 2,000 கன அடி நீரும் காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி வெளியேற்றப்படும் நீரின் அளவு 6,398 கன அடியாக உயர்ந்துள்ளது.