சுவிட்சர்லாந்தில் வங்கிக்கணக்கு அல்லது பணப்பரிமாற்றம் செய்தல்
பணம் சம்பாதித்து கட்டணம் செலுத்துபவருக்கு வங்கியில் அல்லது தபால்; கணக்கு தேவை.
பொருட்கள் வாங்குவதற்கு வங்கி -கடன் அட்டை பரவலாகப் பாவிக்கப்படும்.
வங்கிக்கணக்கு
சுவிஸில் அநேகமாக ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் ஒரு வங்கிக்கணக்கு இருக்கும். வேலை செய்பவர்களின் சம்பளம் வழமையாக வங்கிக்கணக்குக்குத்தான் அனுப்பப்படும்.
அதிகளவு வங்கிகளும் தபாலகங்களும் தனிப்பட்ட கணக்குகளை வழங்குகின்றன. வங்கிக்கணக்கு தொடங்குவது இலவசமானது. ஆயினும் பின்பு பலவித கட்டணங்கள் செலுத்தவேண்டும். கட்டணங்கள் வட்டிவீதம் சேவைகள் இடத்துக்கிடம் வித்தியாசமாக இருப்பதால் அவற்றை ஒப்பிடுவது நல்லது. வங்கிக்கணக்குத் தொடங்குவதற்குக் கடவுச்சீட்டு அல்லது வேறு அடையாள அட்டை அல்லது வெளிநாட்டினர் அடையாள பத்திரம் தேவை.
வங்கி அட்டை / கடன் அட்டை
கணக்கு வைத்திருப்பவர் பணம் எடுப்பதற்காக வழமையாக ஒரு கணக்கு அட்டை கொடுக்கப்படும். இது கணக்குள்ள வங்கிக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
வங்கிகள் தபாலகங்கள் எல்லா தானியங்கியிலும் பணம் எடுக்கக்கூடியதாகவும் அதிகமான கடைகளில் பணம் செலுத்தக்கூடியதாகவும் டெபிட் காட்டுகளை (உ+மாக Maestro) அறிமுகப்படுத்தியுள்ளன.
இந்த அட்டைகளை வெளிநாட்டிலும் பாவிக்கலாம். ஒவ்வொரு அட்டைக்கும் வித்தியாசமான கட்டணம் அறவிடப்படும். கடனட்டைகளைப் பல இடங்களில் விண்ணப்பிக்கலாம். அதன் சேவைகளும் கட்டணங்களும் வித்தியாசமாக இருக்கும், இவற்றை ஒப்பிடுவது பயனுள்ளது. வங்கி அட்டை - கடன் அட்டை மூலம் பணம் செலுத்துவது தற்போது நன்கு பரவியுள்ளது.
கணக்குகள் செலுத்துதல்
சாதாரணமாக கணக்குகள், பணம் செலுத்தும் படிவம் தபால் மூலம் அனுப்பப்படும். இவற்றை மூன்று வழிமுறைகள் மூலம் செலுத்துவதற்கு சந்தர்ப்பங்கள் உள்ளன.
மின் வங்கி: இணையமூலம் பணம் செலுத்துவது, மிகவும் பரவலானதும் பாதுகாப்பானதும்.
கருமபீடத்தில்: பணம் செலுத்தும் படிவம் மூலம் தபாலகத்தில் பணமாகச் செலுத்துதல். தபால் கணக்கு உள்ளவர்கள் நேரடியாகக் கணக்கிலிருந்து கழிக்கலாம். வங்கிக் கணக்கு வாடிக்கையாளர்கள் வங்கிக் கரும பீடத்தில் பணம் செலுத்த வேண்டிய அறிவுறுத்தல் கொடுக்கலாம்.
தபால் மூலம்: பணம் செலுத்த வேண்டிய அறிவுறுத்தல்களை தபால் மூலம் வங்கிக்கோ அல்லது தபாலகத்திற்கோ அனுப்பலாம். மேலதிக விளக்கமான தகவல்களை வங்கி அல்லது தபாலகத்தில் தருவார்கள்.
தொடர்ந்து ஒழுங்காக வரும் கணக்குகளுக்கு பணம் செலுத்தும் முறைகள்: நேரடியாக கணக்கிலிருந்து கழிக்கும் முறை (Lastschriftverfahren /LSV | système de recouvrement direct ) இது வசதியானது செலுத்தவேண்டிய பணம் தானாகவே கணக்கிலிருந்து கழிக்கப்படும்.
பணம் செலுத்தவேண்டியவர் அதற்குரிய தகவல்களை நேரடியாகவே வங்கி/தபாலகத்திற்கு அனுப்புவார். எப்போதும் ஒரேயளவு தொகை (உ+மாக வாடகை) செலுத்த வேண்டுமானால் வங்கி அல்லது தபாலகத்திற்கு ஒரு நிரந்தரக்கட்டளை (Dauerauftrag | ordre permanent) மூலம் பணத்தை மாற்ற ஒழுங்கு செய்யலாம்.
கணக்குகளில் எப்போதும் செலுத்தவேண்டிய காலக்கெடு குறிக்கப்பட்டிருக்கும். இக் காலக் கெடுவை கடைப்பிடிக்காவிடின், தொடர்ந்து வசூலிப்பு இலாகாமூலம் வசூலிப்பதற்கான நடைமுறை ஏற்படுத்தப்படலாம்.