திருவள்ளூரில் உள்ள சைக்கிள் கடையில் தீ விபத்து!
திருவள்ளூர் அடுத்த என்.ஜி.ஓ. காலனி பகுதியைச் சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் (45). இவர் திருவள்ளூர் ஜே.என். சாலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இந்த சைக்கிள் கடையில் பிரபல நிறுவனங்களின் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் சுமார் 30 லட்சத்துக்கு மேலான புதிய சைக்கிள்கள் மற்றும் உதிரி பாகங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. கடையின் உரிமையாளர் லிங்கேஸ்வரன் வழக்கம்போல் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் சைக்கிள் கடையை பூட்டிக்கொண்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் சுமார் 12 மணி அளவில் திடீரென கடைக்குள் இருந்து புகை வருவதை கண்ட அவ்வழியாக சென்ற பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த திருவள்ளூர் தீயணைப்புத் துறையினர் கடைக்குள் கொழுந்து விட்டு எழுந்திருந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் கடைக்குள் இருந்த சுமார் 30 லட்சம் மதிப்பிலான சைக்கிள்கள் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கு மின் கசிவு காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.