புதிய நாடாளுமன்றத்தில் தேசியக் கொடி ஏற்றம்!
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர், விநாயகர் சதுர்த்தி நாளான நாளை (செப்.18) டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தில் தொடங்குகிறது. மொத்தம் ஐந்து அமர்வுகளாக நடக்கும் சிறப்புக் கூட்டத்தொடரில், பல்வேறு முக்கிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது.
செப்டம்பர் 19- ஆம் தேதி முதல் செப்டம்பர் 22- ஆம் தேதி வரை புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் சிறப்பு அமர்வு நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற வளாகத்தில் ‘கஜ் துவார்’ என அழைக்கப்படும் நுழைவு வாயிலில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தி.மு.க., காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டனர். அதேபோல், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.