தேசிய விருது வென்ற பிரபல இயக்குநர் கே.ஜி ஜார்ஜ் காலமானார்!
மலையாள திரையுலகின் மூத்த இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ் (77) உடல்நலக் குறைவால் கொச்சியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.
1970-80களில் மலையாள சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் இயக்குநர் கேஜி ஜார்ஜ். இயக்குநர் ராமு காரியத்தின் உதவியாளராக திரைவாழ்க்கையைத் தொடங்கிய கேஜி ஜார்ஜ், 1976 ஆம் ஆண்டு ‘ஸ்வப்நதானம்’ என்கிற மலையாள படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அவரது முதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்துக்கு கேரள மாநில அரசின் சிறந்த விருதும் கிடைத்தது. அதோடு மட்டுமல்லால் முதல் படத்திலேயே மலையாளத்தில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும் வென்றார்.
இதனைத் தொடர்ந்து உள்கடல், மேளா, யவனிகா, லேகாயுடே மரணம் ஒரு பிளாஷ்பேக், அடமிண்டே வாரியேள், மேட்டோரல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்றார் கே.ஜி. ஜார்ஜ்.
மலையாள சினிமாவில் தனக்கு என்று ஓர் இடத்தை உருவாக்கி இருந்த ஜார்ஜ், 9 கேரள மாநில அரசின் விருதுகளை வென்றுள்ளார். மலையாள சினிமாவுக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2016-ல் ஜேசி டானியல் விருதும் வழங்கப்பட்டது. இது மலையாள திரையுலகில் மிகவும் உயரிய விருதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், பக்கவாதம் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த கேஜி ஜார்ஜ் வயது மூப்பு காரணமாக கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள தனது இல்லத்தில் இன்று (செப்.24) உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு மலையாள சினிமாவை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், கேஜி ஜார்ஜ் மறைவுக்கு இரங்கள் தெரிவித்துள்ளனர். மறைந்த கேஜி ஜார்ஜ் உடலுக்கு மலையாள திரைப் பிரபலங்கள் உள்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.