25வது பிறந்தநாளை முன்னிட்டு முகப்பை மாற்றிய கூகுள்
இணையத்தின் பிரபலமானதேடு பொறியான கூகுள் இன்று 25-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. வழக்கமாக பிரபலங்களின் பிறந்தநாளை நமக்கு நினைவூட்டும் கூகுள் இன்று தனது பிறந்த நாளையே முகப்பாக வைத்துள்ளது.
அமெரிக்காவின் ஸ்டான் போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்று கணினி அறிவியல் திட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர்கள் வைன் லாரி பேஜ் மற்றும் செர்கி பிரின் ஆகிய 2 நண்பர்கள் உருவாக்கியது தான் கூகுள். தங்களுடைய புராஜெக்ட்டாக அவர்கள் ஒரு தேடு தளத்தை ஆன்லைனில் உருவாக்க நினைத்தார்கள்.
நூலகத்தில் இருக்கும் நூல்கள், ஆவணங்களை தேடுவதற்காக உருவாக்கப்பட்ட இந்த தேடுபொறிதான், இன்று இணையதள உலகில் பிரபலமான கூகுளாக வளர்ந்து நிற்கிறது.
கூகுள் கடந்த 1998-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது. 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் அறிமுகம் செய்யப்பட்டது.
இதுவரைக்கும் 170-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை கூகுள் கையகப்படுத்தி இருக்கிறது. டேட்டா பாதுகாப்புக்காக உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் 9 லட்சம் சர்வர்களை வைத்திருக்கிறது கூகுள்.
மேலும் ஒரு நாளில் 100 கோடிக்கும் மேலான தேடல்களைக் கையாள்வதாகவும், உலகம் முழுவதும் 150 க்கும் மேற்பட்ட மொழிகளில் தேடல்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூகுள் நிறுவனத்தில் 53 ஆயிரம் பணியாளர்களுக்கு மேல் பணிபுரிகிறார்கள்.