முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் நீதித்துறைக்கு விழுந்த சம்மட்டியடி: சிறீதரன் எம்.பி காட்டம்

#SriLanka #Mullaitivu #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #sritharan
Kanimoli
2 years ago
முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் நீதித்துறைக்கு விழுந்த சம்மட்டியடி: சிறீதரன் எம்.பி காட்டம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா, தன்மீது தொடர்ச்சியாகப் பிரயோகிக்கப்பட்டு வந்த அழுத்தங்கள் காரணமாக, தனது பதவியை துறந்துள்ளமை, இந்த நாட்டின் நீதித்துறையினது சுயாதீன இயங்குநிலையை அடியோடு ஆட்டம் காணச் செய்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா தனது பதவியை துறந்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

 மேலும் தெரிவிக்கையில், ''நீதிபதி சரவணராஜா கடந்த 2023.07.04 ஆம் திகதி தனது கடமை நிமித்தம் குருந்தூர் மலைக்கு விஜயம் செய்திருந்த போது தெரிவித்த கருத்துகளை மேற்கோள்காட்டி 2023.07.07 ஆம் திகதி நாடாளுமன்ற உரையிலும், அதன்பின்னர் பொது வெளியிலும் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியை, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அவதூறுக்கு உள்ளாக்கி இருந்தார்.

 அதன்பின்னர் குருந்தூர்மலையில் தமிழர்கள் வழிபாடியற்றுவதற்கு, சட்டவரைமுறைகளுக்கு உட்பட்டு நியாய பூர்வமாக வழங்கப்பட்ட தீர்ப்பினை மாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் மட்டத்தில் பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் மற்றும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகியுள்ளமை இந்த நாட்டின் நீதித்துறைக்கும், ஜனநாயகத்துக்கும் விழுந்திருக்கும் சாட்டையடி. மேலும், இதை மிக மோசமான இனவாதச் செயலாகவே கருத வேண்டியுள்ளது. இதற்கு, எனது வன்மையான கண்டனங்களை தெரிவிக்கிறேன்.

 2000 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாக இருந்த சிறீநிதி நந்தசேகரன் மீது, இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியை அடியொற்றி, மீளவும் வடக்கின் தமிழ் நீதிபதி ஒருவர் மீது பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தகையதொரு உயிர் அச்சுறுத்தல், இலங்கையின் நீதித்துறையின் இயங்கு நிலையும் மெல்ல மெல்ல இராணுவ மயம் படுத்தப்படுவதற்கான எத்தனமாகவே தென்படுகிறது.

 நீதித் துறையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் இந்த நாட்டில், இன, மத ஆக்கிரமிப்புகளும், அடக்குமுறைகளும் எத்தனை வீரியமாய் இருக்கும் என்பது பற்றி, சர்வதேச சமூகம் இனியேனும் கூருணர்வோடு செயலாற்ற வேண்டும் என்றும், இத்தகையதொரு நிலை, இன்னுமோர் தமிழ் நீதிபதிக்கு ஏற்படாதிருக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4