மகாளய பட்சம் என்றால் என்ன? பெண்கள் தர்ப்பணம் கொடுக்கலாமா?...
பெண்கள் தர்ப்பணம் கொடுக்கலாமா, அமாவாசை விரதம் இருக்கலாமா, பெண்களில் யார் தர்ப்பணம் கொடுக்கலாம், யாரெல்லாம் கொடுக்கக் கூடாது என்பதிலும் சந்தேகம் இருந்து வருகிறது.
கணவர் உயிருடன் இருக்கும் போது ஒரு பெண், இறந்த தனது தாய்- தந்தைக்காக எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுக்கக் கூடாது.
திருமணமாகாத கன்னிப் பெண்களும், கணவர் இல்லாமல் தனியாக இருக்கும் பெண்களும் தங்களின் பெற்றொர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கக் கூடாது.
மகாளய பட்சம் :
முன்னோர்களின் ஆசியை பெறுவதற்குரிய காலமான மகாளய பட்சம் புரட்டாசி மாதம் பெளர்ணமி துவங்கி, அமாவாசை வரையிலான 15 நாட்கள் ஆகும்.
இந்த ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதி துவங்கி, அக்டோபர் 14 வரை மகாளய பட்சம் உள்ளது. அக்டோபர் 14 ம் தேதி மகாளய அமாவாசை கடைபிடிக்கப்பட உள்ளது.
இதை சர்வபித்ரு மோட்ச அமாவாசை என்றும் சொல்வதுண்டு.
மூன்று வகையான கடன்கள் :
பொதுவாக மூன்று விதமான கடன்கள் கண்டிப்பாக தீர்க்கப்பட வேண்டும் என இந்த மத சாஸ்திரங்கள் சொல்கின்றன.
அவை இறை கடன் (குலதெய்வ கடன்), ரிஷி கடன் மற்றும் பித்ரு கடன் ஆகியனவாகும்.
இவற்றில் இறை கடன், பூஜைகள் செய்வதால் தீரும். ரிஷி கடன் தான தர்மங்கள் செய்வதாலும் தீரும், பித்ரு கடன் என்பது சிராத்த சடங்குகள் செய்வதால் மட்டுமே தீரும்.
இறந்த தாய், தந்தை, மனைவி, பிள்ளைகளுக்காக ஒரு ஆண் மகாளய பட்சத்தில் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்கலாம். தாய் உயிருடன் இருந்து தந்தை மட்டும் இல்லை என்றாலும் தர்ப்பணம் கொடுக்கலாம். கணவனை இழந்த ஒரு பெண், பிள்ளைகள் இருந்தாலும் விரதம் இருந்து, தர்ப்பணம் கொடுக்கலாம்.
பொதுவாக ஒருவர் இறந்து விட்டால் அவருடைய பிள்ளைகள் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பித்ரு கடன் நிறைவேற்றலாம். ஆனால் பிள்ளைகள் இல்லாத தம்பதிகள் இருவரும் இறந்து விட்டால் அவர்களுக்கு யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
மகாளய பட்சத்தில் தர்ப்பணம் கொடுக்க வேண்டியவர்கள் :
மறைந்த குரு, மாமியார், தாய் மாமன், மாமா, மாமனார், சகோதரர், மைத்துனர், உறவினர்கள், பிள்ளைகள், மருமகன், மகன், நண்பன் ஆகியோருக்கு மகாளய பட்ச காலத்தில் தர்ப்பணம் கொடுக்கலாம். இறந்தவர்களின் பெயர், இறந்த தேதி தெரியாதவர்கள் சர்வபித் மோட்ச அமாவாசை எனப்படும் மகாளய பட்ச அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுக்கலாம்.
தங்களின் பிள்ளைகளுக்காக பல தியாகங்களை செய்து வளர்த்த பெற்றோர், முன்னோர்கள் அவர்கள் இறந்த பிறகும் மனம் மகிழும் படி பார்த்துக் கொள்ள வேண்டியது பிள்ளைகளின் முக்கியமான கடமையாகும். இறந்து போன நம்முடைய முன்னோர்கள் நம்முடைய குலதெய்வத்திற்கு சமமானவர்கள். அதனால் அவர்களின் ஆன்மா மகிழ்ச்சி அடையும் வகையில் வருடத்திற்கு ஒரு முறையாவது சிராத்தம், தான தர்மங்கள் செய்து வழிபட வேண்டியது நம்முடைய கடமை.
யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்கலாம் ?:
இறந்தவர்களுக்கு பிள்ளைகள் யாரும் இல்லை என்றால் அவர்களின் சகோதரர் அல்லது உறவினர்கள் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். மகாளய பட்சம், மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் உறவினர்கள் தர்ப்பணம் கொடுப்பது சாத்தியப்படாது என்பதால் அவர்களுக்கு ஈம சடங்குகள் செய்யும் போதே மொத்தமாக தர்ப்பணம் கொடுத்து விடுவது வழக்கமாக உள்ளது.
இறந்தருக்கு ஒன்று அதிகமான மகன்கள் இருந்து, அவர்கள் ஒன்றாக ஒரே வீட்டில் வசிப்பதாக இருந்தால் அவர்களில் மூத்த மகன் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஒருவேளை மகன்கள் அனைவரும் தனித்தனியாக இருந்தால் தனித்தனியாக தங்களின் வீடுகளில் விரதம் இருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
இறந்தவருக்கு மகன்கள் கிடையாது என்றால், அவர்களின் மருமகன் சிராத்தம் கொடுக்கலாம். அல்லது இறந்தவர்களின் மகள் இருந்தால் அவர்கள் பிண்டம் வைத்து, எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுக்காமல் முன்னோர்களுக்கு படையல் போட்டு, தான தர்மம் வழங்கி வழிபாடு செய்யலாம்.
பெண்கள் தர்ப்பணம் கொடுக்கலாமா ? :
* ஒரு பெண்ணிற்கு கணவன் இறந்து, பிள்ளைகள் யாரும் இல்லை என்றால் தனது கணவருக்காக அந்த பெண் தர்ப்பணம் கொடுக்கலாம்.
* இறந்தவருக்கு மனைவி இல்லை என்றால் அவரின் சகோதரர் தர்ப்பணம் கொடுக்கலாம்.
* உயிரிழந்தவருக்கு மனைவியோ, மகனோ உயிருடன் இல்லை என்றால் அவர்களின் பேரப் பிள்ளை தனது முன்னோர்களுக்காக சிராத்தம் செய்யலாம்.
* ஒரு ஆண், தனக்கு பிள்ளைகள் யாரும் இல்லை என்றால் மட்டுமே தனது மனைவிக்காக தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
* ஒருவருக்கு மகன், பேரன் என யாரும் இல்லாத பட்சத்தில் அவர்களின் உறவினர்கள் அவருக்காக தர்ப்பணம் கொடுக்கலாம். வளர்ப்பு மகன் அல்லது தத்தெடுத்த பிள்ளைகளும் தன்னை வளர்த்தவர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கலாம்.