'டைட்டானிக்' போல 'டைட்டன் விபத்து' சினிமா படமாகிறது
1912 ஆம் ஆண்டு பனிப்பாறையில் மோதி விபத்துக்கு உள்ளான டைட்டானிக் கப்பலை காண்பதற்காக ஜூன் 18 2023 அன்று Ocean Gate நிறுவனத்தின் டைட்டன் நீர்மூழ்கி வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் கனடாவில் உள்ள நியூ பவுண்ட்லாந்து கடற்கரையில் இருந்து புறப்பட்டது. பின்னர் சில மணி நேரத்தில் தாய் கப்பல் உடனான தொடர்பு துண்டிப்பு காரணமாக கப்பல் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. மேலும் டைட்டன் நீர்மூழ்கியில் 96 மணி நேரத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் மட்டுமே இருந்ததால் கப்பலை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.
நான்கு நாள் தேடுதலுக்கு பின் டைட்டன் நீர்மூழ்கியின் சிதைந்த பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. விசாரணையில் டைட்டன் நீர்மூழ்கி அழுத்தம் தாங்க முடியாமல் வெடித்து சிதறியதாக சொல்லப்பட்டது. இதில் ஓஷன் கேட் நிறுவனத்தின் சிஇஓ ஸ்டாக்டன் ரஷ், பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட பிரிட்டன் தொழிலதிபர் ஷாஜிதா தாவூத், அவரது மகன் சுலைமான் தாவூத், பிரிட்டன் தொழிலதிபர் ஹமிஷ் ஹர்டிங் மற்றும் ஆய்வாளர் பால் ஹென்றி நார்கோலைட் ஆகிய ஐந்து பேர் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து டைட்டானிக் படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் டைட்டன் பற்றிய படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ஜேம்ஸ் கேமரூன் வதந்திகளுக்கு நான் பதில் சொல்லத் தேவையில்லை என்று கூறியிருந்தார்.
இதற்கிடையில் Mind Riot என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனம், இந்த சம்பவத்தை படமாக்க இருப்பதாக தெரிவித்தது. சால்வேஜட் (Salvaged) என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த படத்தை Blackening என்ற படத்தை தயாரித்த பிரயன் டாப்பின்ஸ் இணை தயாரிப்பு செய்கிறார். ஜஸ்டின் மேரிகோர், ஜோனதன் கிசே திரைக்கதை எழுதுகிறார். ஆனால் யார் இயக்கப் போகிறார்கள் என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த படம் பற்றி பேசி உள்ள திரைக்கதை ஆசிரியர் கீசே இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை கௌரவப்படுத்தும் வகையில் இந்த படம் அமையும் என தெரிவித்துள்ளார். இந்தப் படத்தைப் பற்றிய மேலும் தகவல்கள் அடுத்த சில நாட்களில் வெளியாகலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.