நவராத்திரி விழாவை கொண்டாடிட நீங்கள் தயாரா?
அம்பிகையின் பல்வேறு ரூபங்களை வழிபடும் ஒன்பது நாள் இரவிற்கு நவராத்திரி என்று பெயர்.
மகிஷாசுரன் அசுரன், பெண்ணை தவிர தனக்கு உலகில் வேறு சக்தியால் மரணம் நிகழக் கூடாது என வரம் பெற்றவன். இந்த வரத்தின் காரணத்தால் பல தீமைகள் செய்த மகிஷனுடன் மகாசக்தியான அம்பிகை போரிட்டு, வெற்றி பெற்ற நாட்களையே நவராத்திரி என்றும், அதன் இறுதி நாளை விஜயதசமி என்றும் நாம் ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் அம்பிகையை துர்க்கையின் வடிவமாகவும், அடுத்த 3 நாட்கள் மகாலட்சுமியின் அம்சமாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியின் ரூபமாகவும் வழிபடுகிறோம்.
அதாவது இச்சா சக்தி, கிரியா சக்தி மற்றும் ஞான சக்தியின் வடிவமாக அம்பிகையை வழிபடும் நாளாகும்.
வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் வந்தாலும் புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியே சாரதா நவராத்திரியாக நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
புரட்டாசி மாத அமாவாசை நாளில் கொலு படிகள் அமைத்து, கொலு பொம்மைகள் அடுக்கி, பலவிதங்களில் வீடுகளை அலங்கரித்து, அம்பிகையை வீட்டிற்கு அழைத்து வழிபடுவது நவராத்திரியின் சிறப்பம்சமாகும்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அம்பிகையை அலங்கரித்து, தினம் ஒரு நைவேத்தியம் படைத்து வழிபடுவது வழக்கம்.
நவராத்திரி 2023 தேதி : இந்த ஆண்டு நவராத்திரி விழா அக்டோபர் 15 ம் தேதி துவங்குகிறது. அக்டோபர் 23 ம் தேதி சரஸ்வதி பூஜையும், அக்டோபர் 24 ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட உள்ளது.
நவராத்திரி விழா இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை துவங்குவதால் அன்று பகல் 12 முதல் 01.30 வரை எமகண்டமும், பகல் 3 முதல் 04.30 வரை குளிகையும், மாலை 04.30 முதல் 6 வரை ராகு காலமும் உள்ளது.
இதனால் கலசம் வைத்து வழிபடுபவர்களும், கொலு வைத்து வழிபடுபவர்களும் பகல் 12 மணிக்கு முன்பாக அமைத்து விட வேண்டும்.
கொலு அமைக்க நேரம் :
பெரும்பாலானவர்கள் அமாவாசை அன்றைக்கே கலசம் அல்லது கொலு அமைப்பதற்கான பணிகளை துவங்கி விடுவார்கள். இந்த ஆண்டு மகாளய அமாவாசை என்பதால் அதிகம் வேலை இருக்கும் என்பவர்கள் பெயருக்கு ஒரு படி, சில பொம்மைகளை மட்டும் அடுக்கி, கொலுவிற்கான பணிகளை துவக்கி விடலாம்.
முடியாதவர்கள் அக்டோபர் 15 ம் தேதியன்று காலை பணிகளை துவக்கலாம். மாலை 6 மணி வரை ராகு காலம் உள்ளதால் முதல் நாள் வழிபாட்டினை மாலை 6.15 மணிக்கு பிறகு துவங்குவது சிறப்பானதாகும்.