இந்தியா-சிக்கிம் வெள்ளம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு
சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள லாச்சன் பள்ளத்தாக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மேகவெடிப்பு ஏற்பட்டது. லோனாக் ஏரி அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட இந்த மேகவெடிப்பால் குறுகிய நேரத்தில் அதீத கனமழை கொட்டித்தீர்த்தது.
இந்த பேய் மழையால் அங்குள்ள டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் இருபுறமும் உள்ள கரைகளை உடைத்துக்கொண்டு சீறிப்பாய்ந்த பெரு வெள்ளம் கிராமங்கள் மற்றும் நகரங்களை மூழ்கடித்து சுங்தாங் அணையை சென்றடைந்தது.
இந்த வெள்ளப்பெருக்கால் பாக்யாங், காங்டாக், நாம்சி, மங்கன் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மங்கன் மாவட்டத்தின் சுங்தாங் நகரம் மிகவும் மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
அந்த நகரின் 80 சதவீத பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மங்கன், காங்டாக் மற்றும் நாம்சி ஆகிய மாவட்டங்களில் 11 பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
நூற்றுக்கணக்கான வீடுகள், குடிநீர் குழாய்கள், கழிவுநீர் பாதைகள் உள்ளிட்டவை வெள்ளத்தில் முழுமையாக சேதமடைந்தன. சிக்கிமில் மேகவெடிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
26 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.