உலகக் கோப்பையை முன்னிட்டு மெட்ரோ ரெயில் சேவையில் சிறப்பு சேவைகள்
உலகக் கோப்பை 2023 தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், நாளை நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் மோத இருக்கின்றன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. இதனிடையே போட்டி காரணமாக சென்னையில் நாளை (அக்டோபர் 13) மெட்ரோ ரெயில் சேவை இரவு 12 மணி வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் போட்டிக்கான டிக்கெட்களை காண்பித்து மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ரசிகர்கள் போட்டி முடிந்த பிறகு, போட்டிக்கான டிக்கெட்டை காண்பித்து இலவசமாக மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யலாம்.
ஆனால், போட்டியை காண மைதானத்திற்கு செல்லும் போது, இந்த சலுகை பொருந்தாது. பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையம் நோக்கி இரயில்கள் இயக்கப்படும்.
புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையம் வரை 15 நிமிட இடைவெளியில் இரயில்கள் இயக்கப்படும். போட்டி நாளில் (13.10.2023) இரவு 11.00 மணி முதல் - 12.00 மணி வரை பச்சை வழித்தடத்தில் இருந்து நீல வழித்தடம் மாறுவதற்கான இரயில் சேவை இயக்கப்படாது.