ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ் தொகையாக வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கூறுகையில், "லேகோ பைலட்டுகள், ரயில்வே கார்டுகள், ரயில்நிலைய மேலாளர், கண்காணிப்பாளர், தொழில்நுட்ப நிபுணர்கள், உதவியாளர்கள் மற்றும் 'சி' பிரிவு ஊழியர்கள் உள்ளிட்ட 11.07 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க ரூ.1,968.87 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரயில்வே ஊழியர்களின் சிறப்பான செயல்திறனை பாராட்டி மத்திய அமைச்சரவை இந்த தொகையை வழங்க ஒப்புதல் கொடுத்துள்ளது" என்றார்.
2022-2023-ம் ஆண்டில் ரயில்வேயின் செயல்திறன் மிகவும் சிறப்பாக இருந்தது. ரயில்வே 1,509 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றிச் சென்றது. இதே காலகட்டத்தில் சுமார் 6.5 பில்லியன் பயணிகள் ரயில்வே மூலமாக பயணித்துள்ளனர் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.