கப்பம் செலுத்தாத வர்த்தகர் ஒருவரைக் கொலை செய்ய சென்ற இருவர் கைது

#SriLanka #Arrest #Crime
Prathees
2 years ago
கப்பம் செலுத்தாத வர்த்தகர் ஒருவரைக் கொலை செய்ய சென்ற இருவர் கைது

ஒரு மில்லியன் ரூபா கப்பம் செலுத்தாத வர்த்தகர் ஒருவரைக் கொல்லச் சென்ற இருவரை களனிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

 திட்டமிட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் சீடன் ஒருவரே இருபதாயிரம் ரூபா ஒப்பந்தத்திற்கு இருவரையும் வழிநடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 களனிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (17) பிற்பகல் கடவத்தை ராகம வீதி சந்திக்கு அருகில் உடனடியாக வீதித் தடையை பயன்படுத்தி மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 29 மற்றும் 24 வயதுடைய சந்தேகநபர்கள் மேகவத்தை மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

 கணேமுல்ல சஞ்சீவ தலைமையிலான பல கொலைகளுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுநராக இருந்து தற்போது டுபாயில் தலைமறைவாகியுள்ள சக்தி லக்ருவன் என்ற நபரே இருவரையும் வழிநடத்தியுள்ளதாக சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர்.

 கடவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த லக்ருவன் என்ற வர்த்தகரிடம் இருந்து 10 இலட்சம் ரூபா கப்பம் கோரப்பட்டதாகவும், அதனை அவர் வழங்காவிடின் குறித்த வர்த்தகரையோ அல்லது அவரது முகாமையாளரையோ இருபதாயிரம் ரூபா ஒப்பந்தத்திற்கு கொலை செய்யுமாறு சந்தேகநபர்கள் இருவரிடமும் கூறியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 அதன்படி, இரு தினங்களுக்கு முன்னர் குறித்த இடத்தைச் சோதனையிடச் சென்ற இருவரும் நேற்று கொலை செய்யச் சென்ற போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 வர்த்தக நிலையத்திலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் என்பதுடன், சம்பவம் தொடர்பில் களனி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 இதேவேளை, கிருலப்பனையில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் அலுவலகத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

 துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிருலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4