யார் இந்த மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார்? வரலாறு பேசுகிறது. Lanka4 ஊடக அஞ்சலிகள்.
“உலகில் உள்ள எந்த இந்து கோயில்களிலும் மாதவிடாய் காலங்களில் பெண்களை அனுமதிப்பதில்லை. மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோயிலுக்கு வந்தால் தீட்டு என்பது ஐதீகமாக இருந்தது.
ஆனால் இது ஐதீகங்களை பங்காரு அடிகளார் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை”
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் மாரடைப்பால் காலமானார்.
ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் கிராமத்தில் 1941ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி கோபால நாயக்கர் - மீனாம்பாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார்.
இவரது இயற்பெயர் சுப்பிரமணி என்பதாகும். செங்கல்பட்டு பகுதியில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி மையத்தில் படித்து அச்சரப்பாக்கம் பகுதியில் ஆசிரியராக தனது பணியை தொடங்கினார். 1966ஆம் ஆண்டு ஒருநாள் பங்காரு அடிகளாரின் குடும்பத்தில் நடந்த விழா ஒன்றில் பங்காரு அடிகளாரை ஆதி பராசக்தி ஆட்கொண்டதாகவும், தீப ஆராதனை தட்டு ஒன்றை வளைத்து தனது சக்தியை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மேல்மருவத்தூரில் அற்புதம் நடக்க போவதாகவும், தான் அங்கு கோயில் கொள்ளப்போவதாகவும் பங்காரு அடிகளார் வாயிலாக ஆதிபராசக்தி அம்மன் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதுமட்டுமின்றி பங்காரு அடிகளார் வீட்டின் பின்புறம் இருந்த வேப்ப மரத்தில் பால் வடிவதாக தகவல் பரவவே ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு செல்ல ஆரம்பித்தனர்.
அந்த வேப்பமரம் இருந்த இடத்தில்தான் தற்போது ஆதிபராசக்தி அம்மன் கோயில் அமைந்துள்ளது. வேப்பமரம் இருந்த இடத்தில் சிறிய அளவிலான கூரை கொட்டகை அமைக்கப்பட்ட நிலையில், ஆசிரியராக இருந்த பங்காரு அடிகளார் அருள்வாக்கு கூறுதல், வேப்பிலை மந்திரித்தல் உள்ளிட்ட போன்ற பணிகளை செய்து வந்தார்
இந்த நிலையில்தான் 1968ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி லட்சுமி என்பவரை பங்காரு அடிகளார் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்பழகன், செந்தில் குமார், ஸ்ரீதேவி, உமாதேவி ஆகிய நான்கு குழந்தைகள் பிறந்தன.
மேல்மருவத்தூரில் கட்டப்பட்ட அம்மன் கோயில் புகழ் தமிழகம் முழுவதும் வாய்வழி செய்திகள் மூலமும் ஊடகங்கள் மூலமும் பரவத் தொடங்கின. ஆண்களை காட்டிலும் பெண்களின் வருகை அக்கோயிலில் அதிகரித்த வண்ணம் இருந்தது.
பங்காரு அடிகளார் ஆதி பராசக்தியின் மறுவடிவம் என்று கூறி அம்மா என்று அவரை பக்தர்கள் அழைக்கத் தொடங்கினர். உலகில் உள்ள எந்த இந்து கோயில்களிலும் மாதவிடாய் காலங்களில் பெண்களை அனுமதிப்பதில்லை.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோயிலுக்கு வந்தால் தீட்டு என்பது ஐதீகமாக இருந்தது. ஆனால் இது ஐதீகங்களை பங்காரு அடிகளார் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.
மாதவிடாய் என்பது ஒரு இயற்கை நிகழ்வு எனவும் அந்த நாட்களில் பெண்கள் கோயிலுக்கு வருவதால் புனிதம் கெட்டுவிடாது என்றும் கூறிய அவர், மாதவிடாய் காலத்தில் பெண்களை கோயிலுக்கு மட்டுமல்ல, கருவறைக்கு உள் சென்று விக்ரகத்தை தொட்டு பூஜைகளை செய்யலாம் எனவும் பங்காரு அடிகளார் அறிவித்தார்.
பங்காரு அடிகளாரின் அந்த அறிவிப்பு அக்காலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.