இலங்கையர்கள் தொடர்பில் உலக உணவுத் திட்டம் எடுத்துள்ள தீர்மானம்!

#SriLanka #UN #World_Health_Organization #Tamil Food
Mayoorikka
2 years ago
இலங்கையர்கள் தொடர்பில் உலக உணவுத் திட்டம் எடுத்துள்ள தீர்மானம்!

நாடளாவிய ரீதியில் உணவுப்பாதுகாப்பின்மை நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் 242,000 பேருக்கு அவசியமான உணவுப்பொருள் உதவிகளை எதிர்வரும் சில வாரங்களில் வழங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.

 தீவிர பொருளாதார நெருக்கடியை அடுத்து கடந்த காலங்களில் நாட்டின் உணவுப்பாதுகாப்பு நிலை வெகுவாக மோசமடைந்தது. அதனால் ஏற்படக்கூடிய குறுங்கால மற்றும் நீண்டகாலப் பாதிப்புக்களைக் குறைத்துக்கொள்ளும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் முகவரமைப்புக்களின் ஒன்றான உலக உணவுத்திட்டம் கடந்த ஒருவருடகாலமாக நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு அவசியமான மனிதாபிமான உதவிகளை வழங்கிவருகின்றது.

images/content-image/2023/10/1697765028.jpg

 அதன்படி இவ்வாண்டு கடந்த செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 2 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு அவசியமான உதவிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், நாட்டின் மொத்த சனத்தொகையில் சுமார் 3.9 மில்லியன் மக்கள் ஓரளவு உணவுப்பாதுகாப்பின்மை நிலைக்கு முகங்கொடுத்துள்ளதாக மதிப்பிடப்பட்டிருப்பதாகவும் உலக உணவுத்திட்டம் தெரிவித்திருக்கின்றது.

 குறிப்பாக கடந்த ஓகஸ்ட் மாதம் 5 வயதுக்குக் குறைந்த 200,000 க்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கும், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கும் அவசியமான திரிபோஷா வழங்கப்பட்டதாக சுட்டிக்காட்டியிருக்கும் உலக உணவுத்திட்டம், நாடளாவிய ரீதியில் 4000 க்கும் மேற்பட்ட குடும்பங்களை அடிப்படையாகக்கொண்டு 'குடும்ப மட்டத்திலான உணவுப்பாதுகாப்பு' தொடர்பான ஆய்வொன்றை முன்னெடுத்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றது.

 அதேபோன்று இவ்வருடம் ஜனவரி - செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 145,288 பேருக்கான நிதியுதவியும், 604,212 பேருக்கான உணவுப்பொருட்கள்சார் உதவியும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கும் உலக உணவுத்திட்டம், எதிர்வரும் சில வாரங்களில் மேலும் 242,000 பேருக்கான உணவுப்பொருள் உதவிகளை வழங்கமுடியும் என நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றது.

 மேலும் நாடளாவிய ரீதியிலுள்ள 7076 பாடசாலைகளில் கல்விபயிலும் சுமார் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான பாடசாலை உணவுக்குத் தேவையான 1698 மெட்ரிக் தொன் அரிசியும், 767 மெட்ரிக் தொன் புரத தானியமும் உலக உணவுத்திட்டத்தினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4