கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு!
சென்னையில் நேற்று கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடியை, பாதுகாப்பு பிரிவு போலீசார் சுற்றி வளைத்தனர். எதற்காக பெட்ரோல் குண்டு வீசி, கவர்னர் மாளிகை மீது தாக்குதல் நடத்த முயன்றார் என்பது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை கிண்டி, சர்தார் பட்டேல் சாலையில் உள்ள கவர்னர் மாளிகை முன், ரவுடி ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை பிடித்து, அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சர்தார் பட்டேல் சாலையில், நெடுஞ்சாலை துறை தலைமை அலுவலகம் உள்ளது. அந்த வழியாக கவர்னர் மாளிகை நோக்கி, மர்ம நபர் ஒருவர் நடந்து வந்துள்ளார். இவர், பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை எடுத்து வந்ததாக தெரிகிறது. இவர், பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை, கவர்னர் மாளிகை நோக்கி வீச முற்பட்டபோது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து விட்டனர். இரண்டு பாட்டில்களும் கவர்னர் மாளிகைக்கு வெளிப்புறம், சர்தார் பட்டேல் சாலையில் தடுப்புவேலிகள் அருகே விழுந்து உடைந்தன.
பெட்ரோல் நிரப்பிய பாட்டில் ஒன்றின் திரியில் லேசான தீ மட்டும் இருந்தது. மர்ம நபரிடம் மேலும் இரண்டு பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கவர்னர் மாளிகையை சுற்றி எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை; அங்கு பாதுகாப்பு குளறுபடியும் இல்லை. பிடிபட்ட நபர், சென்னை நந்தனம், எஸ்.எம்., நகரைச் சேர்ந்த கருக்கா வினோத், 42, என்பது தெரியவந்துள்ளது. இவர், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில், 'சி' பிரிவு ரவுடி பட்டியலில் உள்ளார். இவர் மீது, வெடி பொருட்கள் தடுப்பு சட்டம் மற்றும் கொலை முயற்சி என, 14 வழக்குகள்
உள்ளன. இரு தினங்களுக்கு முன் தான் சிறையில் இருந்து, ஜாமினில் வெளியே வந்துள்ளார். நேற்று காலை, 10:00 மணியளவில் மது குடித்துள்ளார்; பிடிபட்ட போதும் போதையில் இருந்தார். இச்சம்பவம் தொடர்பாக, கருக்கா வினோத் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எதற்காக இந்த செயலில் ஈடுபட்டார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.