இலங்கையில் போதைப் பொருள் பாவனையை ஒழிக்க பாராளுமன்றத்தில் மூவின அரசியல்வாதிகளும் இணைந்து குரல் கொடுக்கவேண்டும். செய்வார்களா?
இப்பதிவு இலங்கையின் பாராளுமன்றில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்குமான பதிவாகும்.
இலங்கைத் திருநாடு என்பதற்கு சரியான உதாரணமாக இலங்கை விளங்குகிறது. இருந்தும் ஏன் இப்படி பஞ்சம், பட்டிணி, கொலை கொள்ளை, வெடிகுண்டு, தீவிரவாதம், மதச்சண்டை என நாடே ஏனோ தற்பொழுது ஒரு சுடு காடாக காட்சியளிக்கிறது. ஆராய்வோம் வாருங்கள்.
முதலில் நாம் பல இன மோதலாலும், மத மோதலாலும் அடிபட்டு ஓய்ந்து ஒரு குட்டையில் புதிதாக ஒரு நீரூற்றாக இலங்கை மக்கள் காணப்படுகிறோம். யார் நல்லவன் யார் கெட்டவன், யார் குற்றவாளி, யார் சுற்றவாளி என்ற விவாதத்தை ஒரு புறம் ஒதுக்கி வைத்துவிட்டு இனி இலங்கையில் உள்ள மக்களையும் வருங்கால சந்ததியையும் காக்க என்ன செய்யவேண்டும் என்பதுதான் கேள்வியாகும்.
ஆம்.. பசி, பட்டினி, கடன், மத துவேசம், இனத்துவேசம் தாண்டி ஒரு பூதம் மெல்ல மெல்ல அயல் நாடிலிருந்து கிளம்பி எம்மை கடல் கரையை அலை தடவித் தடவி அழித்ததுபோல போதைவஸ்து என்ற பூதம் அரித்துக்கொண்டிருப்பதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.
எங்கு பார்த்தாலும் இந்து கோவிலை உடைப்பதும் புத்தர் சிலை வைப்பதும், புத்தர் விகாரையை உடைப்பதும் இந்து கோவிலை கட்டுவதும், காளி கோவிலை உடைத்து பள்ளிவாசல் கட்டுவதும், பள்ளிவாசலை இடித்து இந்து கோவிலோ அல்லது புத்த விகாரை கட்டுவதும் எதற்கு என்ற காரணம் தெரியாமலே ஆர்பாட்டம் செய்வதும், பாமர மக்களிடம் தொடக்கம் பாராளுமன்றம் வரை பேசப்படுகிறது.
ஏதோ கும்பகர்ணன் எழுந்து திடீரென சபையில் பேசுவதுபோல நாட்டையும் நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் இளைஞர்களையும் அவர்கள் எதிர்காலத்தையும் நமக்கே தெரியாமல் ஆணிவேரில் இருந்து அழிக்கும் இப் போதை ஒழிப்பு பற்றி பேசுகிறார்கள். இலங்கையில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளுக்குப் பின்னாலும் போதைவஸ்தும், அதன் தாக்கமும் இருப்பதை பலர் அறிந்தும் அறியாமல் இருப்பது இலங்கையின் சாபக்கேடாகும்.
இப்போதைவஸ்து வியாபாரத்தில் பெரிய பாதாள உலகம் இருப்பதால் பயந்தோ அல்லது யாருக்காவது அதனால் வருமானம் அடைய எண்ணியோ இதை பற்றி பேசவேண்டிய இடங்களில் பேசப்படுவதில்லை. முதலில் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் பாராளுமன்ற பிரதிநிதிகள் பேசவேண்டும். பாராளுமன்றில் ஒலிக்கும் ஒட்டுமொத்த இனம், கட்சி மதம் பார்க்காமல் எப்பொழுது பேசுகிறார்களோ அப்பொழுதுதான் மக்களிடம் சென்றடையும்.
பாராளுமன்றென்றால், வெறும் ஆழும் கட்சி எதிர்க்கட்சியை விமர்சிப்பதோ, எதிர்க் கட்சி உறுப்பினர்கள் ஆளும் கட்சியை எதிர்ப்பதோ கிடையாது. மாறாக மக்களின் தற்போதய தேவையையும், வருங்கால இலங்கையின் ஒட்டுமொத்த இனத்தின் குரலாகவும் இருக்கவேண்டும். நாம் முதலில் மனிதர்கள் மனிதாபிமானத்தோடு நடப்பது முக்கியமாகும். பின்னர் தான் நாம் இலங்கையர்கள் என்ற பகுதிக்குள் வரவேண்டும். அதன் பின்னர் தான் மதம் கட்சி என பிரிவுகள் பார்க்கலாம்.
எவனொருவன் மனிதாபிமானத்தை இழந்து இனம், மொழி, மதம் என பாகுபாடுகாட்டி அடுத்தவரை உடலாலோ, மனதாலோ, வார்த்தைகளாலோ பிரிவினை காட்டுகிறானோ அப்பொழுதே அவன் விலங்காகக்கூட இருக்க முடியாத ஜடப்பொருளாகிவிடுகிறான். அன்பான பாராளுமன்ற உறுப்பினர்களே! நீங்கள் ஒவ்வொருவரும் இணைந்து இப் போதையை ஒழிக்க கட்டாயம் குரல் கொடுக்கவேண்டியவர்களாக இருக்கிறீர்கள். இல்லையேல் உங்கள் சந்ததி கட்டாயம் இப் போதையால் அழியப்போவது உறுதி.
இந்தப் போதைப் பொருளை விற்பவன் யார்? நுகருவோன் யார்? கடத்துபவன் யார் என்பது உங்களில் பலருக்கு தெரியும் தெரிந்தும் ஏன் மௌனம். உங்கள் வருங்கால சந்ததிகளின் நல் வாழ்வில் நீங்கள் என்ன செய்யபோகிறீர்கள்? பாராளுமன்றிலும் வெளியேயும் போதைக்கு எதிராக உங்கள் குரலை உயர்த்துங்கள். உங்களால் ஒரு அரசை உருவாக்க முடியும் என்றால் ஏன் உங்களால் வருங்கால சந்ததிகளை காக்க முடியாது. இப்பொறுப்பை ஒவ்வொரு பெற்றோரும், ஒவ்வொரு பாடசாலைகளும், ஒவ்வொரு நண்பனோ நண்பியோ, பாதுகாப்பு அதிகாரிகளோ கையில் எடுத்தாலே இப் போதைவஸ்து விநியோகத்தினை அடியோடு ஒழிக்க முடியும்.
அன்பான பாராளுமன்ற உறுப்பினர்களே! உங்கள் ஒவ்வொருவரின் சேவைகளும் மக்கள் பாராட்டகூடியதாக இருக்கவேண்டும். உங்கள் ஒத்துளைப்பு மக்களுக்கு தேவை. யார் பொறுப்பு. யார் பூனைக்கு முதலில் மணி கட்டப்போகிறீகள்? நீங்கள் கொடுக்கும் குரல் நீங்கள் இறந்தாலும் ஒலித்துக்கொண்டே இருக்கும். நீங்கள் ஒரு பொதுநலவாதியாக இருப்பது உண்மையாக இருந்தால் செய்யுங்கள். சேர்ந்து செய்யுங்கள். ஒன்றும் இல்லை. நீங்கள் செய்யவேண்டியது ஒரு பாராளுமன்ற அமர்வில். ஒரே ஒரு முறை உங்கள் வாரிசுகளுக்காக “அனைத்து கட்சி உறுப்பினர்களே நாம் அனைத்திலும் விவாதம் செய்துள்ளோம். அதையும் கட்சி கொள்கை, இனம், மதம் தாண்டி இலங்கையர்களாக மனிதாபிமானிகளாக நாட்டையும் நாட்டு மக்களையும், வருங்கால சந்ததிகளையும் புற்று நோயாக அழிக்கும் போதைக்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இலங்கையின் எதிர்காலமும், வருங்கால இளைஞர்களின் எதிர்காலமுமே எமக்கு முக்கியம்” என அறைகூவல் விடுங்கள்.
உங்கள் குரலால் இலங்கையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும். இலங்கை உலக அரங்கில் பேசப்படும். நீங்கள் அனைத்தையும் விவாதியுங்கள். ஆனால் ஒட்டுமொத்த நாட்டையே விழுங்கிக்கொண்டிருக்கும் பூதமான போதையை ஒழிக்க அனைவரும் ஒன்றாக நின்று குரல் கொடுத்து உலகத்தில் உங்கள் ஒவ்வொருவரின் சேவையை உலகம் பாராட்டும் வண்ணம் செய்யுங்கள். எமது lanka4 ஊடகம் இதனை தனது சேவையில் போதை ஒழிப்பு, வருங்கால இளைஞர்களின் எதிர்காலம் போன்று போர் எதிர்ப்புக்கு நாம் மணிகட்டியிருக்கிறோம்.
உங்கள் பொறுப்பை எப்பொழுது நீங்கள் செய்யப் போகிறீர்கள்? போதை, போர், ஒழிப்புக்கு எமது லங்கா4 ஊடகம் உங்களுக்கும், மக்களுக்கும், இளைஞர்களுக்கும் எப்பொழுதும் துணை நிற்கும் என்பது உறுதி. ஒன்றுபட்டால் உங்கள் சந்ததி காக்கப்படும். இல்லையேல் சாரதி இல்லாத தேர் போல சாக்கடையில் மூழ்கி அழியப்போவது நிச்சயம். நீங்கள் ஒற்றுமைப்பட இதை விட்டால் இனி ஒரு வாய்ப்பு கிடையாது. உங்கள் ஒற்றுமைக்கு எமது lanka4 ஊடகத்தின் முற்கூட்டிய வாழ்த்துக்கள்.
-செய்தி செல்வா சுவிஸ்-