முள்ளிவாய்காலில் அனைத்தும் மூழ்கிப்போனதா?
ஒரு தேசிய எழுச்சி கண்ட சமூகம் கண்முன்னே சீரழிகிறது! “இயக்கத்திற்கு போயிட்டான், போயிட்டாள்” என்ற சமூகம், இன்று அவன், அவள் “ஐஸிற்கு, ஹெரேயினுக்கு” அடிமை எனக் கதறுகிறது.
யாழிருந்து “யாழ் நிலாவில்” கொழும்பை நோக்கிய பயணம் தொடர்கிறது. சக நண்பர்கள் பயணித்த ரயில் பெட்டியில் சுன்னாகத்தில் இருந்து ஒரு இளைஞன் ஏறுகிறான். சக பயணிகளுடன் சரளமாக உரையாடி நெருக்கத்தை ஏற்படுத்துவதில் அவன் ஈடுபடுகிறான்.
அவனது இலக்கு, பயணி ஒருவரின் தங்கச் சங்கிலி என்பதனை சக பயணிகள் இனம் கண்டு கொள்கிறார்கள். கொழும்பை நோக்கிய பயணம் தொடர்கிறது. வவுனியாவில், வவுனியாவை சேர்ந்த மற்றுமொரு இளைஞன் ஏறுகிறான். அவன் ஏற்கனவே ஐஸ்போதையை தலைக்கு ஏற்றியிருந்தான்.
அவனது போதை மயக்கத்தை பயணிகளால் உணர முடிந்தது. அவனது பிரதான இலக்கும் திருட்டாகவே இருந்தது. அதனால் யாழ் நிலா காவலர்களிடம் அந்த இருவரையும் ஒப்படைக்க சக பயணிகள் தயாரானார்கள். ஓடும் ரயிலில் விசாரணை ஆரம்பமானது. இருவரிடமும் பயணச் சீட்டுகள் இல்லை.
சுன்னாகத்தில் ஏறிய இளைஞன் தனக்கு 14 வயது என்கிறான். ஆனால் பொறுப்புவாய்ந்த பதவி நிலையில் உள்ள அவனது சகோதரனின் இலக்கத்திற்கு தொடர்புகொண்ட போது, தனது தம்பியின் வயது 18 என்றும் போதைக்கு அடிமையாகிய அவரை காவற்துறையிடம் ஒப்படைக்குமாறும், பின்னர் தாம் அவரை அங்கு சென்று பொறுப்பேற்பதாகவும் கூறினார்.
ஐஸ் போதை தலைக்கேறிய மற்றய இளைஞன் தனக்கு 24 வயது எனக் கூறினான் அவன் முறிச்சிக் கட்டு குளத்தைச் சேர்ந்தவன். யாழ் நிலா காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த இளைஞர்கள் அநுராதபுர ரயில் நிலையத்தில், காவற்துறையிடம் ஒப்படைக்கபட்டனர்.
பொருளாதார ரீதியாக நடுத்தர குடும்ப பின்னணிகளை, சமூகப் பின்னணிகளைக் கொண்ட இந்த இளைஞர்கள் சமூக சீரழிவில் சிக்கித் தவிப்பதனை தடுப்பதற்கு வழி என்ன?
முள்ளிவாய்காலில் அனைத்தும் மூழ்கிப்போனதா? தேசியம், சுயநிர்ணயம், சமஸ்டி, ஒரு நாடு இருதேசம், வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபை, சுய ஆட்சி என்ற வானளாவிய கோசங்கள் மட்டும் அழிவை நோக்கிச் செல்லும் இந்த சமூகத்தை மீட்குமா?
“ஒரு காலம் இளையவர்கள் உன்னதமான இலட்சியங்களால் வழிநடத்தப்பட்டார்கள். ஆனால் இப்பொழுது அப்படியல்ல. இளையவர்களை எப்படி அரசியல் நீக்கம் செய்யலாம்? அவர்களை எப்படிப் போதைக்குள் மூழ்கடிக்கலாம்? அவர்களுடைய கைகளில் எப்படி வாள்களைக் கொடுத்து மோத விடலாம்? அவர்களுடைய நம்பிக்கைகளை, விசுவாசத்தை, கவனக் குவிப்பை எப்படி இடம் மாற்றலாம்? அவர்கள் மத்தியில் இருந்தே எப்படி முகவர்களை உருவாக்கலாம்? என்றெல்லாம் சிந்தித்து செயல்படுவதற்கு அரச பலமும் அரச வளங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
அது ஒரு மையத்தில் இருந்து திட்டமிடப்படுகின்றது. ஒருங்கிணைக்கப்படுகிறது.
அது ஒரு பண்பாட்டுச் சிதைப்பு, ஒரு பண்பாட்டு நீக்கம். அதை எதிர்கொள்வதற்கு தமிழ்ச் சமூகம் தயாராக உள்ளதா? அதை குறித்து தமிழ்க் கட்சிகளிடம் பொருத்தமான அரசியல் கலைத் தரிசனங்கள் உண்டா? என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தனது கட்டுரை ஒன்றில் கேள்வி எழுப்பி உள்ளதனை இங்கு மீள நினைவூட்டுவது பொருத்தமானது.