இங்கிலாந்துக்கு 230 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது இந்தியா
ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.
முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
தொடர்ந்து பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் 9 ரன்களிலும், விராட் கோலி 0 ரன்னிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களிலும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர்.
இதனால் 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிய நிலையில், கேப்டன் ரோஹித் ஷர்மா கேஎல் ராகுலுடன் சேர்ந்து அணியை மீட்டெடுத்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா அபாரமாக விளையாடி அரைசதம் கடந்து 87 ரன்கள் சேர்த்தார்.
மறுமுனையில் இருந்த கேஎல் ராகுல் நிலைத்து நின்று ஆடினாலும் 39 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதே சமயம் அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 49 ரன்கள் எடுத்தார்.
மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்ததால், 50 ஓவர்களில் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய டேவிட் வில்லி 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் அடில் ரஷீத் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.