World Cup - இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி
உலகக் கோப்பை தொடரின் 36-வது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்களான ஹெட் மற்றும் டேவிட் வார்னர் முறையே 11 மற்றும் 15 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இதையடுத்து களமிறங்கிய ஸ்மித் 44 ரன்களை குவித்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும், லபுசேன் பொறுமையாக விளையாடி ரன் குவித்தார். இவர் 71 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு களமிறங்கிய கிரீன் 47 ரன்களையும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 35 ரன்களையும் எடுத்த நிலையில், 49.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 286 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
287 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரரான பேர்ஸ்டோ ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். இவருடன் களமிறங்கிய டேவிட் மலான் பொறுமைாக ஆடி 50 ரன்களை எடுத்து, அவுட் ஆனார். இவருடன் விளையாடிய ஜோ ரூட் 13 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த வந்த பென் ஸ்டோக்ஸ் நிலைத்து நின்று ஆடி பொறுமையாக ரன்களை சேர்த்தார்.
இவரும் 64 ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி தடுமாறியது. இந்த நிலையில், களமிறங்கிய கேப்டன் பட்லர் 1 ரன்னில் அவுட் ஆனார். பிறகு வந்த மொயின் அலி 42 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்த வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில், 48.1 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.
இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.